Thursday, August 25, 2016


இரவு

--------


இருளில் மறைந்திருந்த திருடர்கள்
ஓசையின்றி
கரும்புகை  என  மெல்ல நகர்ந்து
வாசலில் படுத்துறங்கும்
கறுப்பு நாயின் வாலை மிதித்து விடாமல்
வீட்டுக்குள் நுழைவதை
கண்கள் ஒளிர 
பார்த்துக் கொண்டிருந்தது
மதில் மேல் அமர்ந்திருந்த 
கருப்புப் பூனை.
----


- தென்பாண்டியன்


ஆனந்த விகடன் 25.08.2013 ல்
வெளியானது

Wednesday, August 10, 2016


பூனை வீடு


இசையால் நிரம்பியதிரும்
அந்த வீடு பூட்டியிருக்கிறது

எதேச்சையாக பியானோ மீது
தாவி  நடக்கத்துவங்கிய
பூனையின் கால்கள்
இசை வயப்பட்டு மீண்டும் மீண்டும்
நடக்கிறது

மின்சாரம் துண்டிக்கப்பட்ட மழையிரவில்
அசைவற்று கண்கள் ஒளிர
பூனை அமைதி கொள்கிறது

மழை நின்று
குளிர்ந்து புலரும் ஈரவிடியலில்
கண்களயர்ந்து பூனை 
உறங்குகிறது

சன்னலிடையே உள்நுழையும்
வெயிலில்
தூசியகன்ற பியானோக் கட்டைகள் 
பளிச்சிடுகின்றன.-  தென்பாண்டியன்.

( உயிர் எழுத்து இதழில் பிரசுரமான கவிதை) 

வனம் பெருகுதல்

....
முன்பொரு காலத்தில்
இப்பெரும் தேசத்தின் 
இளவரசானாய்  இருந்தேன்

தரையிறங்கிய துஷ்ட தேவதைகள்
என் தேசத்தை வென்றெடுத்த போது
என் நாட்டின் பிரஜைகள்
பறவைகளாகவும்
தோல்வியுற்ற எனது சேனைகள்
மரங்களாகவும் சபிக்கப்பட்டனர்

தேசமிழந்து வனமெங்கும்
தனிமை கொண்டலையும்  நான்
வெட்டப்படாத மரங்களால்
வனங்கள் பெருகவும்
வேட்டையாடப்படாத பறவைகளால்
வானம் நிறையவும்
என் பழங்கடவுளை வேண்டி நிற்கிறேன்.

- தென்பாண்டியன்
Tuesday, August 9, 2016

அரூப நடனம்


கொடியில் உலரும்
குழந்தைகளின் ஆடைகளை
அணிந்து கொண்டு
நடனமிடுகிறது காற்று


காற்றின்  அரூப உடல்  மொழியில்  
சுழலும் ஆடை  
குழந்தையாகி குதுாகலிக்கிறது


பெண் குழந்தைகளின்
பிரில் வைத்த பாவாடைகள்
காற்றின் உடலுக்கு
கச்சிதமாய் பொருந்திப் போக

நிசப்தமாய் நிழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் நடனம்

.....
- தென்பாண்டியன்
( குமுதம் திராநதி பிரசுரமானது )

Monday, August 8, 2016

மஞ்சள் பூக்களைப் பறிப்பவள்


மஞ்சள் பூப்போட்ட பாவாடையும்
 இளம்மஞ்சள் நிறத்திலான தாவணியும்
அணிந்திருக்கும் அவள்
பாவாடைதையை மடித்து கோணியாக்கி
மஞ்சள் ரோஜா சாமந்தி சூரியகாந்தி என
மஞ்சள்நிறப் பூக்களை பறிக்கத்துவங்கினாள்.

அவள் மஞ்சள் நிறப்பூக்களை மட்டும் பறித்ததால்
வனம் மஞ்சள் நிறத்தை இழந்து  வெறுமை கொண்டது
வனமெங்கும் மஞ்சள் நிறப்பூக்களை தேடி அலைந்தும்
மடி நிறையாத அவள்
இறுதியாய் அந்தி வானத்திலிருந்த 
பருதிப்பூவை பறித்து மடியிலிட்ட
ஒளியிழந்து வானம் இருள் கொண்டது.

இரவெல்லாம் மஞ்சள் பூக்களை 
தொடுத்துக்கொண்டிருந்த அவள்
அதை மாலையாக்கி அணிந்து கொண்டபோது
 அவளுக்கு பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த
 இளம் மஞ்சள் நிறத்திலான சிறகுகள் முளைத்தன.
 அவள் ஒளிப்பறவையாகி சிறகசைத்த போது
வைகறையில் பருதிப்பூ மலர்ந்து கொண்டிருந்தது.

- தென்பாண்டியன்.

ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதை

Wednesday, August 3, 2016


குளம்

தவளைகள் மீன்கள் 
தண்ணீர் பாம்புகள்  
இன்னும் பிற நீர் வாழ் 
உயிரினங்கள் ஜீவித்திருக்கும் 
குளத்தில் 
பாசிகளும் நீர் தாவரங்களும் 
படர்ந்திருக்கின்றன...!


எதை வீசி எரிந்தாலும் 
உள்ளே இழுத்துக்கொண்டு 
நேர்த்தியான நீர் வளையங்களை 
காட்சிப்படுத்தும் குளம் 
நெகிழி பொருட்களை மட்டும் 
வெளியே தள்ளி மிதக்கவிடுகிறது.                                                          

– தென்பாண்டியன்
/ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை /
Tuesday, August 2, 2016


சருகுகளின் சப்தம்இலையுதிர்ந்த மரக்கிளையில் 
தனித்து அமர்ந்திருக்கும் 
பறவையின் மௌனம்
இப்பிரபஞ்சத்தை அச்சுறுத்துகிறது.

இயற்கை சமன்குலைந்த 
இவ்வுலகில்
காலத்தின் நுண்ணடுக்குகளில்
அரூபமாய் மறைந்திருக்கும் 
பேரழிவு ரகசியங்களை 
பறவைகள் அறிந்திருக்க கூடும்.

வேர் நுனிகளுக்கு எட்டாத ஆழத்தில்  
உள்வாங்கி விட்ட
நிலத்தடி நீரை நோக்கி 
உலர்ந்த வேர்களை நீட்டும்
தாகித்த மரங்களில் இருந்து
உதிரும் சருகுகளின் சப்தத்தில் 
வறட்சியின் குரூரம் ஒலிக்கிறது.

சற்றும் எதிர் பாரத கணத்தில்
ஈரவாடை  வீசும் திசையை நோக்கி 
பறந்து செல்கிறது அப்பறவை. 


- தென்பாண்டியன்,

இறகு பேனா


கடவுளின்
மேசையின் மீது இருக்கும்
மைப்புட்டியில் உள்ள இறகுப்பேனா
எந்தப்பறவையுனுடையது என
தெரியவில்லை.


எவர் கண்களுக்கும் புலப்படாத
அரூப லிபியில் எழுதும் அவ்விறகில்
இவ்வுலகின் எல்லா நிறங்களும்
தென்படுகின்றன.

கடவுளை சந்திக்க நேர்ந்தால்
அப்பறவையின் பெயர் குறித்து
வினவவேண்டும்

அப்பெயர் அழிந்து வரும்
அரிய பறவைகள் பட்டியலில்
இருக்கக்  கூடும்.

-  தென்பாண்டியன்தானியவயல்


பெரும் தருக்கள் அசையும்
அடர் வனத்திலிருந்து
பறந்து வரும் பறவைகள்
என் தானிய வயல்களில்
அமர்கின்றன.

யாதொரு எதிர்வினையும்
நிகழ்த்தவியலாது விரைப்பாக நிற்கிறது
காவல் பொம்மை.

கையில் கவண்கல் இருந்தும்
வீச மனமின்றி
பரண்மேல் நின்று ரசிக்கிறேன்
அவை இரையுண்ணும் பேரழகை.

- தென்பாண்டியன்

Monday, August 1, 2016


காத்திருத்தல்
------------------------


நீண்ட காத்திருப்பிற்கு பின்
சந்தித்துப் பிரிய நேரும்
தருணங்களில்
இட்டுக் கொள்ளும் முத்தம்
புணர்ச்சிக்கு நிகரானது...

- தென்பாண்டியன்
பறவைகளை வழி நடத்துபவன்
---------------------------------------------------------
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடித்ததும்
அது பறந்து விட்டது.

மீண்டும் ஒரு பறவையை
வரையத் துவங்கினேன் 
வரைந்து முடித்ததும்
அதுவும் பறந்து விட்டது.

நான் வரைந்து
கொண்டேயிருந்தேன்
அவைகள் பறந்து
கொண்டேயிருந்தன....

இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைளும் வந்து
அமர்ந்து கொண்டன. !

………

- தென்பாண்டியன் .
துயரகணம்
-------------------

மனம் கசந்த பொழுதுகளில்
பெறப்படும் எவ்வித முத்தமும்
தித்திப்பதில்லை.

நிறமிழந்த துயரத்தை
கோடுகளும் புள்ளிகளுமின்றி
சித்திரமாக்குகையில்
பிசாசுகள் கண் விழிக்கின்றன


ஆலகாலம் தேங்கிய ஆழிப்பேராழத்தில்
மூழ்கி கிடக்கையில்
கிளிஞ்சலென கரையொதிக்கி
போகிறது அப்பேரலை.

தென்பாண்டியன்
காலச்சுவடு இதழில் வெளியான கவிதை சித்திரக்காரி
–––––––––
மகள் நல்ல சித்திரக்காரி
கோடுகளையும் வண்ணங்களையும்
நுட்பமாக இணைத்து சித்திரம் வரைய
கற்றுத்தேர்ந்திருக்கிறாள்.


அவள் பறவைகளை வரையும் போது
அகண்ட வானத்தையும்
அவை அமர்வதற்கேற்ற கனி மரங்களையும்
வரைந்து விடுகிறாள்

அவள் வரையும்
ஆறுகளிலும் குளங்களிலும்
நீர் வற்றுவதே இல்லை
நீர் பறவைகளை வரையும் போது
நீருக்குள் மீன்களையும் வரைந்து நீந்த விடுகிறாள்
நிலக்காட்சிகளை வரைய திட்டமிடும் போது
பசும் புல்வெளிகளை தீட்டிய பின்
கால்நடைகளை வரைந்து மேய விடுகிறாள்
அவள் வரைந்த கார்மேகங்கள்
பெரும் மழையாகி பெய்யும் போது
எல்லோரும் நனைகின்றனர்
அவள் யார் கையிலும்
குடை வரைந்து கொடுக்கவில்லை
*
தென்பாண்டியன்
(காலச்சுவடு’ (01.05.2015) மே மாத இதழில்
வெளிவந்த என் இரண்டு கவிதை)

நிறங்களானவள்

---------------------
எனக்கு பிரியமான
நிறங்களிலான ஆடையை
எப்போதும் அணிந்து வரும் நீ

நேற்று மரகதப்புறாவின்
கழுத்து நிறத்திலான ஓர் ஆடையை
அணிந்து வந்திருந்தாய்.

இன்று கானல் நீரின் சிற்றலை போல்
மின்னும் ஒரு பட்டாடையை
அணிந்து வந்திருக்கிறாய்.

நாளை இப்பேராகாயத்தை
உள்வாங்கி பிரதிபளிக்கும்
நீலக்கடல் நிறத்தில் ஓர் ஆடையை
நீ அணிந்து வரக்கூடும்.

நிறங்களுக்குள் மிதந்தும் மறைந்தும்
கரைந்து விட்ட உன்னை
ஒரு கித்தானில் வடித்தெடுத்த போது
ஆடைகளற்ற பிம்பமாய் எஞ்சி இருக்கிறாய்.

இப்போது எனக்கு பிரியமான நிறங்களில்
ஓர் ஆடையை உனக்கு
வரைந்து கொண்டிருக்கிறேன்.
***
(ஆனந்த விகடனில் வெளி வந்துள்ள என் கவிதை)


தென்பாண்டியன்

Friday, July 29, 2016
உறக்கமிழந்தவன் இரவு
––––––––––––––––––––
நள்ளிரவில் தட்டப்படும்
அல்லது சாத்தப்படும்
கதவின் சப்தம்
ஒரு லயத்தோடு ஒலிக்கிறது.

பனியுறைந்த இருள் மீது
ஒளிரும் திங்கள்
அவ்விரவை சாம்பல் நிறமாய்
மாற்றுகிறது.

நிசப்தம் கலையாத சன்ன ஒலியுடன்
இரவுப் பறவைகள்
விரைகின்றன.

உறக்கமிழந்து தவிப்பவனின்
கூதல் மிகுந்த துயர கணங்கள்
விடியலற்று அலைகிறது.

தனிமையை
மேலும் தனிமையாக்கி
பெய்கிறது மழை.

ஒரு மலரை போல்
மணமுடையதாகவும்
ஒரு பறவையை போல்
விடுதலையுடையதாகவும்
இருப்பதில்லை வாழ்க்கை.
நீங்காத சாபத்தை போலவும்
பீதியூட்டும் மரணத்தை போலவும்
இருக்கிறது
………
(‘குமுதம் தீராநதி’ 2015 அக்டோபர் இதழில்
வெளிவந்துள்ள என் கவிதை...)