Monday, June 28, 2010

கவிஞர்.சிற்பி நேர்காணல்-சந்திப்பு:தென்பாண்டியன்


நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் வானம்பாடிக் கவிதை இயக்கத்தின் பதிவுகள் தனித்துவமானது. அதன் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ்க்கவிதையில் புதிய பரிணாமத்தையும் இளங்கவிஞர்களின் பாரம்பரியத்தையும் உருவாக்கியது. இலக்கிய இதழாகத் தொடங்கிய வானம்பாடியை ஒரு கவிதை இயக்கமாக மாற்றியப் பெருமைக்குரியவர்களில் மிக முக்கியமானக் கவியாளுமை ’கவிஞர் சிற்பி’. தனது 50 ஆண்டு கால இலக்கியப் பங்களிப்பில் 60க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருப்பதோடு தமிழில் இரண்டு சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றிருக்கும் முதல் கவிஞர். ரசனை இலக்கிய இதழின் நேர்காணலுக்காக அவரது இல்லத்தில் சந்தித்த போது கடந்த கால ஞாபகங்களுக்குள் பின்நோக்கிப் பயணித்து வானம்பாடிகள் குறித்தக் கவித்துவமான நினைவுகளையும் சமகால இலக்கிய நிகழ்வுகள் பற்றியப் பதிவுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.


ரசனை: உங்களது இளமைக்காலம் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

சிற்பி: என்னுடைய குடும்பம் நடுத்தர விவசாயக் குடும்பம். என்னுடைய கிராமத்தில் நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். இரண்டாவது உலக யுத்தம் முடிந்து கொண்டிருந்த நேரம் அது. அதை ஒட்டி பொள்ளாச்சி நகரில் வந்து படிக்க வேண்டும் என்று சொல்லி என்னுடைய அப்பா விரும்பினார். அதனால் நான் 5ம் வகுப்பில் பொள்ளாச்சியில் சேர்ந்தேன். ஆனால் அதை நான் முழுமையாக முடிக்கவில்லை. அந்த படிப்பின் மேல் எனக்கு ஆர்வம் இல்லை அதனால் பள்ளிக்கூடத்தை விட்டு ஓடி விட்டேன். பிறகு என்னை பல இடங்களில் தேடி ஒரு உறவினர் வீட்டில் கண்டுபிடித்தார்கள். என்னுடைய அப்பா முறையான கல்வி கற்றவர் அல்ல. அதனால் என்னை படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார். அது அவருக்கு ஒரு ஏமாற்றமாக போய் விட்டது. அந்த ஏமாற்றத்தில் அவர் இடிந்து போயிருந்த போது எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு சிறு கடைக்காரர் அவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் சொன்னார். கேரளத்தில் ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறார். அவரிடம் கொண்டு போய் விட்டால். பையனை உருப்படியாக உருவாக்கி விடுவார் என்று என் தந்தையிடதில் கூறினார். சித்தூர் பக்கத்தில் நல்லேபள்ளி அங்கு சாமியப்ப பிள்ளை என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் தமிழர். அந்த பகுதி தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்ததால் அங்கு அவர் தமிழாசிரியராக பணியாற்றினார். அப்போது அவரிடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அவர் என்னை பள்ளியில் சேர்ப்பதற்காக தேர்வுக்கெல்லாம் தயார் செய்து பள்ளியில் சேர்த்து விட்டார். நான் பள்ளியில் சேர்ந்த சமயம் அவருக்கு தத்தமங்கலம் என்ற ஊருக்கு மாறுதல் வந்து விட்டது. அங்கேயே என்னையும் அவர் சேர்த்துக் கொண்டார். பிறகு அங்கிருந்துதான் என்னுடைய உயர்நிலைப் படிப்பு வரை படித்தேன். அதனால் என்னுடைய கிராமத்தில் வாழ்ந்த காலம் என்பது மிக சிறிய வயது பையனாக இருந்த போதுதான். அதன் பிறகு நான் வரவும் போகவுமாக இருந்திருக்கிறேனே தவிர நிரந்தரமாக நான் அங்கு இருக்க வாய்ப்பில்லை. நான் பள்ளிக் கல்வி முடித்தவுடன் கல்லூரி படிப்புக்காக திருச்சி போய் விட்டேன். அதனால் திரும்பவும் என் கிராமத்திற்கு போக முடியவில்லை. கிராமத்து வாழ்வை நான் அனுபவித்தேன் என்பது என்னுடைய ஏழு, எட்டாவது வயது வரை மட்டும்தான்.





ரசனை: கல்லூரியில் இளங்கலைப் பட்டதிற்காக எந்தப் பாடத்தைத் தெரிவு செய்தீர்கள்?

சிற்பி: நான் கேரளாவில் படிக்கும் போது தமிழ் ஒரு பாடம் தான் மற்றதெல்லாம் மலையாளத்தில்தான் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும் போது அப்போதெல்லாம் நேரடியாகப் பட்டப்படிப்பிற்கு போக முடியாது இணடர்மிடியட் வகுப்பு இருந்தது. அதனால் இண்டர்மிடியட் வகுப்பில் படிக்கும் போது மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக இயற்கை-விஞ்ஞானம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களை படித்தேன். என்னுடைய அப்பா நான் மருத்துவத் தொழிலுக்கு போக வேண்டும் என விரும்பினார். ஆனால் நான் கேரளவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து உடனேயே எனக்கு தமிழ் மீது ஒரு ஆர்வம் இருந்தது. நான் கேரளாவில் படித்த போது தமிழ் சொற்பொழிவுகளைக் கேட்பதோ தமிழ் புத்தகங்களைப் படிப்பதோ இல்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. அப்போது திராவிட இயக்கம் வளந்து கொண்டிருந்த காலம். திருச்சி ஒரு மையமாக இருந்தது. அப்போது திருச்சியில் கி.ஆ.பெ.விசுவநாதன் இருந்தார். தொ.பொ.மீ., மா.பொ.சி. போன்றோர்கள் அங்கு சொற்பொழிவாற்ற வந்தார்கள் அதோடு அப்போது இளைஞராக இருந்த கலைஞர் கருணாநிதி தி.மு.க. வின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். அதனால் அவர் வாரம் தோறும் பொதுக் கூட்டங்களில் பேசுவார். அண்ணாவின் சொற்பொழிவுகளை அங்குதான் கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் கேட்டபோது எனக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது. இப்படியெல்லாம் பேசவும் படிக்கவும் முடியவில்லை என்ற வருத்தம் கூட இருந்தது எனக்கு, அப்போது அங்கிருந்த தமிழ்ப் பேராசிரியர். அப்துல்கபூர் நாஞ்சில் நாட்டை சேர்ந்தவர். அவர் பேராசிரியர் அன்பழகனுடைய வகுப்புத் தோழர். அவர் வகுப்பெடுக்கும் போதெல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் படித்ததைப் பற்றி ரொம்பப் பெருமையாக பேசுவார். அதைத் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார். அதனால் எனக்கு என் அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக தமிழ் மீது தீராத காதல் ஏற்பட்டது. அதற்கு இசைவாக அங்கு பெரிய புத்தகக் கடைகள் இருந்தன. அங்கு இரண்டு வகையான புத்தகங்கள் என்னைக் கவர்ந்தது. பாரதியின் முழுத் தொகுப்பு, பாரதி பிரசுராலயம் அதை வெளியிட்டிருந்தார்கள். அதைப் பார்த்த போது பாரதி இவ்வளவு எழுதியிருக்கிறாரா என்று வியப்பாகயிருந்தது. அதே மாதிரி அப்போது இளைஞர்களின் மனதைக் கவர்ந்தவராகப் பாரதிதாசன் இருந்தார். அப்போது அவர்கள் இருவர் கவிதைகளிலும் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. எனக்குள்ளும் கவிதை எழுத வேண்டும் என்ற துறுதுறுப்பு இருந்துகொண்டிருந்ததால், இவர்கள் இருவர் மீதும் தீராத காதல் இருந்தது. குறிப்பாக பாரதி மேல் தனியான பிரியம் உண்டு. இந்தத் தமிழ் உணர்வும் திராவிட இயக்க உணர்வும் கவிதை உணர்வும் சங்கமித்தது திருச்சியில் இருந்த போதுதான். அதனால் என் அப்பாவுக்குத் தெரியாமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகதில் தமிழ் ஹானர்ஸ் சிறப்பு வகுப்பில் போய்ச் சேர்ந்து விட்டேன். அது என் அப்பாவுக்கு பேரிடியாக இருந்தது. நான் படித்து முடிக்கும் வரை என்னோடு அவர் பேசியது கூட கிடையாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது எனக்குள் இருந்த திராவிட கருத்தோட்டம் மாறியது. அங்கு என்னுடன் படித்த வகுப்புத் தோழர் சண்முகசுந்தரம் என்பவர் விருதுநகர் பக்கத்துக்காரர். அவர் இடதுசாரி சிந்தனையாளர். அது போல வரலாற்றுத் துறையில் படித்துக் கொண்டிருந்த ராஜகோபால் என்பவரும் பொதுவுடமையாளர். கி.வீரமணி என்னுடைய வகுப்புத் தோழர். அவர் எக்கனாமிக்ஸ் ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். நான் தமிழ் ஹானர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன் இருவரும் பக்கத்துப் பக்கத்து அறையில் தான் இருந்தோம். அப்போது எங்களுக்கு ஆங்கிலம் ஒரு பொதுப் பாடமாக இருந்தது. ஆங்கில வகுப்புக்கு இருவரும் சேர்ந்துதான் போவோம். அதனால் எனது அரசியல் கோட்பாடுகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஜீவாவை அழைத்து வந்து பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்று முயன்றோம். ஆனால் அப்போது திராவிட இயக்கத்தின் எழுச்சியிருந்ததால் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க இயலவில்லை. அதனால் அருகிலிருந்த திருவேற்களம் அதுதான் இப்போது அண்ணாமலை நகராக மாறியிருக்கிறது. அங்குள்ள ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ள மைதானத்தில் ஜீவாவை பேச வைத்தோம். இந்த மாதிரிதான் என்னுடைய அரசியல் சிந்தனையும் இலக்கிய சிந்தனையும் மாற்றமடைந்தது.

ரசனை: நீங்கள் கவிதை எழுதத்துவங்கிய காலகட்டத்தில் உங்களை பாதித்த படைப்பாளர் யார்?

சிற்பி: நான் கல்லூரியில் படித்த காலத்தில் முதல் இரண்டாண்டுகள் கவிதைகள் ஏதும் எழுதவில்லை. தமிழ்ப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் போயிருந்தேனே தவிர கவிதை எழுதக் கூடிய அளவிற்கு இலக்கணம் ஏதும் தெரியாது. என்னோடுப் படித்தவர்கள் எல்லோருமே தமிழ் இலக்கணம் படித்துவிட்டு வந்தவர்கள். நான் அப்போது கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இலக்கண இலக்கியங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். தொல்காப்பியம் வரை படிக்க வேண்டும் ஆனால் அப்போது நன்னூல் கூடத் தெரியாமல் ஓயாது படித்து இலக்கணம் கற்றேன். யாப்பிலக்கணமும் கற்றுக் கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் கவிதைகள் எழுதச் சொன்னார்கள். அப்போதுதான் கவிதை எழுத முயற்சி செய்தேன். அதைவிட முக்கியமானது எனக்கு ஆசிரியராக இருந்தவர்களில் மு.அண்ணாமலை என்ற கவிஞர் இருந்தார். அப்போது பொன்னி இலக்கிய இதழில் பாரதிதாசன் பரம்பரையினர் என்ற கவிதைப் பட்டியலில் இடம் பெற்றவர் அவர். பாரதிதாசன் கூட இருந்தவர். அவர் தாமரைக் குமரி என்ற கவிதைத் தொகுப்பொன்றையும் வெளியிட்டிருந்தார். அது மரபுக் கவிதை. அவருடன் தொடர்பிருந்ததால் எனக்கு கவிதை ஆர்வம் தூண்டப்பட்டது. எனது நோட்டுப் புத்தகங்களில் கவிதைகள் எழுதி வைத்திருப்பேன் அது நான் எனக்காக எழுதிக் கொண்டது. அதை மற்றவர்களிடம் படிக்கக்கூடக் கொடுத்ததில்லை. ஒரு முறை என் கவிதைகளை அவரிடம் காட்டினேன். அதை அவர் படித்து விட்டு பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகும் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. என்னுடைய பழைய தாய்வீடான ஜமால் முகம்மது கல்லூரியின் ஆண்டு மலரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு அந்த மலருக்கு ஆசிரியராக இருந்த தமிழ்ப் பேராசிரியர்.அப்துல்கபூர் அண்ணாமலை நகருக்கு வந்திருந்த போது என்னைப் பாராட்டினார். அந்த கவிதை தன்னையும் ஒரு கவிதை எழுதத் தூண்டியதாகவும் தானும் அது போல் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார். அந்தக் கவிதையின் தலைப்பு ‘ஆழ்கடலே கேள்’ என்று ஞாபகம். இதுதான் எனது கன்னி முயற்சி. பொள்ளாச்சிக்கு ஆசிரியராக வந்த பிறகுதான் கவிதைகள் எழுதுதல், கவியரங்குகளில் கலந்து கொள்ளுதல் என்ற முயற்சிகளில் ஈடுபட்டேன். அவைகளை படித்த நண்பர்கள் நன்றாக இருப்பதாக சொன்ன பிறகுதான் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1963ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.

என்னை பாதித்தவர்கள் என்றால் அது எப்போதுமே பாரதிதான். பாரதிதாசனோடு நேரடியாக பழகும் வாய்ப்பு இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த நேயம் இருந்தது என்ற போதும் என்னவோ ஒரு ஆன்ம நேயம் பாரதி மீதுதான் ஏற்பட்டது. பாரதிதாசனிடம் இருந்ததிலும் உள்ளார்ந்த கவித்துவம் பாரதியிடத்தில் இன்னும் ஓங்கியிருந்ததாக எனக்குப்பட்டது. அடுத்ததாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வியல் இலக்கியங்களில் இருந்துதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் என்னைப் பாதித்தவர் கம்பர். எனது கல்லூரி காலம் என்பது கம்பராமாயனத்தின் முழுமையான பதிப்பு கிடைக்காத காலம். ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் பெரியன் சீனிவாசன் ஒரு பதிப்பு போட்டிருந்தார். அது ஒரு கரடு முரடான பதிப்பு. அதை நண்பர்கள் மூலம் வாங்கி ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த அளவிற்கு அதன் மேல் ஈடுபாடு. இப்போது கேட்டால் கூட கம்பராமாயனத்திலிருந்து ஒராயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதனால் கம்பனுடைய கற்பனையும் பாரதியினுடைய எதார்த்தமும் கலந்த கலவைதான் என்னைக் கவிதை எழுத உத்வேகப்படுத்தியது. அடிப்படைத் தூண்டுதல் என்று சொல்லலாம். என்னிடம் ஒருவகைச் செவ்வியல் கூறு உள்ளதிற்கு இதுதான் காரணம்.



ரசனை: ஒரு தமிழ் இலக்கிய மாணவராகவும், ஒரு கவிஞராகவும், கல்லூரிப் பேராசிரியராகவும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இந்த மூன்று தளங்களை பற்றிய உங்களது அனுபவங்களைச் சொல்லுங்கள்.

சிற்பி: நான் மாணவனாய் இருந்த காலத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பள்ளி மாணவனாய் இருந்த காலத்தில் இலக்கிய வெளிச்சம் சற்றும் கிடையாது. ஆனால் கேரளாவில் படித்துக் கொண்டிருந்ததால் மலையாள இலக்கியம் பற்றி வள்ளத்தோளை பற்றி இன்னும் பிற கவிஞர்களை பற்றி கேள்விப்படவும், சந்திக்கவும் இயன்றது. மலையாளக் கவிதைகளில் அப்போது மேலோங்கியிருந்த விஷயம் இசை. இசையில்லாமல் அவர்கள் எந்தக் கவிதையும் சொல்ல மாட்டார்கள். தொடக்கப்பள்ளியில் கூட இசை மயமாகத்தான் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அந்த இசைத் தன்மை எனக்குள்ளும் ஓரளவு ஊடுருவியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கல்லூரிக்கு வந்த போது தமிழில் எனக்குப் போதிய பரிச்சயம் இன்மையால் வேகமாக ஓடி எல்லோருடனும் வரிசையில் சேரவேண்டும் என்ற உந்துதல் இருந்தது. எனக்குச் செலவுக்கு கிடைக்கும் பணத்திற்கு எல்லாம் புத்தகங்கள் வாங்கத் தொடங்கினேன். அப்போது சிறுகதையாசிரியராக அறியப்பட்டிருந்த புதுமைப் பித்தன் நாவலாசிரியர் காண்டேகர் போன்ற எல்லோருடைய புத்தகங்களும் என் பெட்டியில் இருக்கும். நவீன இலக்கியத்தையும் விட முடியாது. பழைய இலக்கியங்களையும் விட முடியாது. இந்த ஓட்டம்தான் என்னுடைய மாணவ வாழ்க்கையில் தீவிரமாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அர்ப்பணிப்புள்ள பொதுவுடமைவாதிகளோடு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் மார்க்சியம் என்ற கோட்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டது என்பதை விட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வின்றி எல்லோருக்குமான வாழ்க்கையை கம்யூனிசம் தரும் என்ற புரிதலால் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்சியக் கோட்பாடுகள், மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள், அழகியல் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் தெரிந்து கொண்டவை பல. அச்சமயம் எல்லா இலக்கியமும் காலத்திற்கு கட்டுப்பட்டதுதான். அச்சமயம் காலமும் கருத்தும் என்ற அபூர்வமான ஒரு கட்டுரையை படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிலர் காலத்தை மீறியும் சிந்திப்பார்கள் ஆனால் அவர்களும் காலத்திற்கு கட்டுப்பட்டே இருப்பார்கள். ஆகவே அனைவரும் தத்தமது காலத்தின் வயப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்பது ஆரம்பத்தில் எனக்குப் பிடிபட்ட விஷயம். அதன் பிறகு சிதம்பர ரகுநாதன், ஜீவா, எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களுடைய எழுத்துகளில் ஏற்பட்ட ஈடுபாடும், பின்னாட்களில் ஜெயகாந்தனை படிக்கும் வாய்ப்பும் என் மாணவப் பருவத்தில் கிடைத்தது. இவ்வாறாக என் மாணவப்பருவம் பயனடைந்தது.

பேராசிரியராக இருந்த அனுபவம் என்றால் நான் அதிகம் வேலை பார்த்தது பொள்ளாச்சிக் கல்லூரியில்தான். அங்கு முப்பத்திரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அதன் பிறகு பல்கலைக் கழகத்தில் ஏழாண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய பேராசிரியர்களான அப்துல்கபூர், மு.அண்ணாமலை, இப்போதும் வாழ்கிற கா.மீனாட்சி சுந்தரம் போன்றவர்களும், ஆங்கிலத்துறையில் இருந்த ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் அறிந்ததை எல்லாம் எவ்வித சுயநலமும் இன்றி மாணவர்களுக்கு உரியது எனக் கற்றுக் கொடுத்தார்கள். இதே பண்பாட்டைத் தான் நானும் ஆசிரியனாக இருந்த போது பின்பற்ற வேண்டும் என நினைத்தேன். என்னுடைய வகுப்புகளில் இலக்கியம் பாதியாகவும் வாழ்க்கை பாதியாகவும் இருக்கும். வாழ்கையோடு இலக்கியத்தை சொல்வது, வாழ்க்கை அனுபவங்களை வைத்து இலக்கியத்தைக் கற்றுக் கொடுப்பது என்பது என் பாணியாக இருந்தது. இப்பவும் என்னுடைய பழைய மாணவகள் என்னை சந்திக்கும் போதெல்லாம் வாழ்க்கையில் பல விஷயங்கள் உங்கள் வகுப்பிலிருந்து கற்றுக் கொண்டோம் என்று சொல்வார்கள். உதாரணமாக கல்வித் துறையில் இருக்கும் கார்மேகம் என் மாணவர். அவர் சொல்வார். நான் அலுவலகத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டதே உங்களிடமிருந்துதான் என்பார். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் அப்படி நேரடியாக எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. இலக்கியமும் வாழ்க்கையும் எப்படி இணைந்து போகிறது என்பதைத் தான் நான் கற்றுக் கொடுத்தேன். அந்த அனுபவம் பொள்ளாச்சிக் கல்லூரியில் பணிபுரிந்த போது அற்புதமான மாணவர்களைக் தேடிக் கொடுத்தது. அவர்கள் வாழ்வில் உயர்வதைப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் கல்லூரிப் பேராசிரியர் பதவிக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவர்களை நேசிப்பதும் மாணவர்கள் ஆசிரியர்களை நேசிப்பதும் என்ற உறவாடல்கள் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் சுயமுன்னேற்றம் என்று அவரவர்க்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதில்தான் கவனமாக இருப்பார்கள். பல்கலைக்கழகத்தை விட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய வாழ்வுதான் மிகச் சிறப்பானது. அது ஒரு இனிய அனுபவம்.

கவிஞராக இருந்த அனுபவம் என்றால் அதைப்பற்றி நான் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் சொல்வேன். நான் என்னை ஒரு கவிஞனாக உணர்ந்ததேயில்லை. நான் கவிதை எழுதுவதுண்டு. அதைப் பலரும் நன்றாக இருக்கிறது என்பார்கள் அல்லது விமர்சனம் செய்வார்கள். அதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது இலக்கியத்தில் ஒரு எல்லையைத் தொட்டு விட்டதாகவோ என்றைக்கும் நான் கருதியதில்லை. இன்றைக்கும் கருதவில்லை. உள்ளே தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாசலாகத்தான் கவிதையை நான் கருதுகிறேன்.




ரசனை: பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள், ஒரு பல்கலைக் கழகத்தின் பணி என்பது வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு போதிப்பது அதில் தேர்வுகள் நடத்தி பட்டங்கள் வழங்குவது போன்ற பணிகள் மட்டும்தானா? குறிப்பாக நான் தமிழ்த்துறையை கருத்தில் கொண்டு கேட்கிறேன். இது சார்ந்த உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

சிற்பி: நான் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அநேகமாக பாடம் கற்றுக் கொடுப்பது என்பது இரண்டாம் பட்சம்தான். அதை விடவும் அவர்களை ஆய்வுக்குத் தூண்டிவிடுவது. புதிய புதிய சிந்தனைகளை அவர்களை ஆய்வுக்கு பொருளாக எடுத்துக் கொள்ள வைப்பது இதில் நான் ஆர்வம் காட்டினேன். என்னுடைய மாண்வர்கள் எடுத்துக் கொண்ட பொருள்களைப் பார்த்தீர்கள் என்றால் வியப்பாக இருக்கும். உதாரணமாக ஒரு மாணவரின் தலைப்பு ‘இலக்கியங்களில் முடிவெடுத்தல் கோட்பாடு’. மேலாண்மைத் துறையில் உள்ள டிசிசன் மேக்கிங் என்பது ஒரு கோட்பாடு. நவீன மேலாண்மைக் கோட்பாட்டை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்பது. இராவணன் சில முடிவுகளை எடுப்பது, தர்மன் சில முடிவுகளை எடுப்பது போன்று காப்பியப் பாத்திரங்கள் எடுக்கும் முடிவுகள் பற்றிய ஆய்வுகளை இவற்றோடு இன்றைய நிகழ்வுகளைப் பொருந்தும் படியான ஆய்வுகளைச் செய்து பார்க்கச் செய்தேன். அப்புறம் நிறைய கருத்தரங்குகளை நடத்தினேன். நான் இருந்த காலத்தில் ஒரு ஆண்டுக்கு நான்கு அய்ந்து கருத்தரங்குகளை நடந்திருக்கின்றன. பணிப் பட்டறைகள் நடத்தியிருக்கிறேன். பாடத்திட்டங்களை பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை மாற்றி அமைக்க முடியுமா என்பது பற்றி எல்லாம் கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன. அது மாதிரி பெண்ணியக் கருத்தரங்குகள் அந்தக் காலத்திலேயே நடத்தினோம். நாட்டின் புகழ் பெற்ற பெண்ணியச் சிந்தனையாளர்கள் அவர்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தாலும் தங்களது சிந்தனையை பகிர்ந்து கொள்ள களம் அமைத்துக் கொடுத்தோம்.

குழந்தைகள் இலக்கியம் பல்கலைக்கழகங்களில் பேசப்படாத ஒரு துறை. இது பற்றிய மூன்று நாள் கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் எல்லாம் கலந்து கொண்டார்கள். எல்லாவற்றையும் விட தலித் இலக்கியம் பற்றி ஒரு கருத்தரங்கத்தை நடத்தினோம். நான் தலித் இலக்கியம் பற்றி கருத்தரங்கம் நடத்திய போது அந்தக் கோட்பாடு என்பது தமிழ் நாட்டில் வளர்ச்சியடையவில்லை. அங்கும் இங்குமாக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அப்போது நான் ராஜ் கெளதன், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்றவர்களை வரவழைத்து பேசச் சொன்னேன். அப்போது தலித் இலக்கியம் குறித்து பேசவே அவர்கள் தயக்கப்பட்டார்கள். இந்தச் சிந்தனை குறித்து தெளிவான வரையறை ஏதும் இல்லை. அதனால் என்ன பேசுவது என்று யோசித்தார்கள். ஆனால் மாணவர்களாக இருப்பவர்கள் நாளைய ஆசிரியர்கள் என்பதால் அவர்க்ளுக்கு இந்த விழிப்புணர்வு அவசியம் என்று இந்த மாதிரியான கருத்தரங்குகளை நடத்தினேன். தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தலித் அமர்வு ஒன்றை வைத்திருந்தார்கள். அதற்கு தலமையாக சிவகாமி I.A.S., அவர்களைப் போட்டிருந்தார்கள். அவர்களை எனக்கு முன்பே தெரியும். அவர்களுடைய ‘பழையன கழிதலும்’ என்ற நாவலைப் பாடமாக வைத்திருந்தேன். இதை எப்படி பாடமாக நடத்துவது என்று பெரும் கூச்சல்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. அதே மாதிரி தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற முதல் நாவலை பாடமாக வைத்த போது இந்த நாவலில் உள்ள இஸ்லாமியச் சொற்கள் புரியவில்லை என்றெல்லாம் ஆசிரியர்கள் சொன்னார்கள். அதே மாதிரி பெருமாள் முருகனின் ஏறு வெயில் என்ற நாவலை பாடமாக வைத்தேன். அப்போது அவர் மாணவராக இருந்தார். இது மாதிரியான நவீன இலக்கியப் படைப்புகளை பாடத்திட்டங்களுக்குள் கொண்டு வருவது போன்ற காரியங்களை நான் துறைத் தலைவராக இருந்த போது செய்திருக்கிறேன். ஒரு முறை பெருமாள் முருகன் ‘எனது நாவலை பாடமாக வைத்து எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள்’ என்று காலச்சுவடில் எழுதின போது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் பல்கலைக் கழக மட்டத்தில் பல ஆசிரியர்களின் எதிப்பை மீறி சில விஷயங்களை செய்திருக்கிறேன். என்ற நிறைவு எனக்குண்டு. மாணவர்களைப் புதிய நோக்கில் புதிய சிந்தனைகளை நோக்கி பயணிக்க வைக்க வேண்டும் என்று நான் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தில் செய்திருக்கிறேன். மூலிகைக் கருத்தரங்கு கூட நடத்தினோம். அதில் மிக அபூர்வமான செய்திகள் எல்லம் அடங்கிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அந்த கட்டுரைகளில் இன்னும் சில வெளியிடப்படவில்லை. பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் கிளை கோவையில் வேளாண்பல்கலைக் கழகத்தில் இருக்கு அவர்களை அழைத்து வந்து பேச வைத்தோம். அவர்கள் மலை வாழ் மக்கள் பற்றிய ஆய்வுகளை எல்லாம் அறிக்கைகளாக அரசுக்கு கொடுத்திருக்கிறோம் ஆனால் அவைகள் பயனில்லாமல் போய்விட்டன என்றார்கள். மலை வாழ் மக்களைப் பொருத்த வரையில் அவர்கள் சிறிய அளவில் தானியங்களை பயிரிடுகிறார்கள். ஆனால் பொட்டனிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் நிபுணர் சொல்கிறார் மலை வாழ் மக்களிடத்தில் அபூர்வமான முதல் தரமான விதைகள் இருக்கின்றன வெளியில் இருப்பவைகள் எல்லாம் பல சேர்மானங்களால் அதன் இயல்புத்தன்மை மாறிவிட்டது. மலை வாழ் மக்களிடம் மூலவித்துகள் மாறாத விதைகள் இன்னமும் உள்ளன என்கிறார். அவைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம் ஆனால் பயனில்லை என்று சொன்னார்கள். இது போலப் பல கருத்துகளை மாணவர்களிடம் பரிமாறிக் கொள்ள தமிழ்த் துறைத் தலைவர் என்ற பொறுப்பு எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

ரசனை: மரபிலிருந்து புதுக்கவிதை உடைந்து எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று பல்வேறு காலகட்ட வளர்ச்சிகள் தமிழ் கவிதைக்கு உண்டு. இந்த பரிமாண வளர்ச்சி கவிதையை எப்படி முன்னெடுத்துச் சென்றுள்ளது?

சிற்பி: நான் ஐம்பதுகளில் மரபுக் கவிதை எழுதத் தொடங்கியவன். நான் எழுதிய காலத்தில் மரபு ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது பாரதிதாசன் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய நிழலில் பலர் மரபுக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதை மீறி புதுக் கவிதை வளர்வது கடினமான காரியமாக இருந்தது. மணிக் கொடிக் காலத்தில் புதுக் கவிதை துளிர்விட்டது என்று சொல்லலாம். அப்போது கூட கு.ப.ரா., புதுமைப் பித்தன், போன்றவர்கள் மரபின் ஓசை நயத்தோடுதான் எழுதினார்கள். பிச்சமூர்த்தியும் கூட அப்படித்தான் முதலில் எழுதினார். அதை அடுத்து எழுத்துக் காலக்கட்டம் ஆரம்பித்த போதுதான் அதற்கான தனித் தன்மை உருவாக ஆரம்பித்தது. அதற்கு முன் இருந்ததெல்லாம் வசன பாணிக் கவிதைதான். இந்த காலக்கட்டத்தில் புதுமை பித்தன் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு இருந்தது. அவர் மரபை மரபின் மூலமாகவே கேலி செய்பவராகயிருந்தார். அவர் வெண்பா எழுதுவார் ஆனால் அதில் வெண்பாவுக்கான இலக்கணம் இருக்காது. வெண்பாவை உடைக்கிற பணியை வெண்பாவின் வடிவத்திலேயே செய்தார். ஆனால் அவருக்கு ஓசைகளின் மீது நம்பிக்கையிருந்தது. அந்த நேரத்தில் புது எழுத்தாளர்களில் பாரதிதாசனை நேசித்தவர் புதுமை பித்தன் மட்டும் தான். அதற்கு காரணம் அவருக்கு மரபில் இருந்த ஈடுபாடு. அவர் கட்டுரைகளில் ஓசை நயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். “சாம்ராட்டுகளின் சப்த ஜாலம்” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஓசைகள் எப்படி கவிதைக்கு ஒரு தனியான பணியை செய்கிறது என்று அதில் குறிப்பிட்டிருப்பார். அதைத் தாண்டி தனித்தன்மையோடு கவிதைகள் எழுதியவர் எழுத்து காலத்தில் பிச்சமூர்த்திதான். எழுத்துக் காலக்கட்டத்தின் ஆரம்பத்திலேயே எனக்கு அவர்களோடு தொடர்புண்டு. சி.சு.செல்லப்பா எங்க கல்லூரிக்கு புத்தகங்களை தூக்கிட்டு வருவார். அவர் வந்தால் எங்கள் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டுத்தான் செல்வார். நவீன இலக்கியப் புத்தகங்களை இப்படி மூட்டை மூட்டையாக கட்டி சுமந்துக் கொண்டு அலைகிறாரே என அவர் மீது மிகுந்த அனுதாபம் உண்டு. அப்போது புதுக்குரல்கள் என்ற தொகுதியை வெளியிட்டு எழுத்து இதழில் புதுக்கவிதைக்கு ஊக்கம் தந்து வளர்ச்சியடையச் செய்த நிலையில் இது ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. வருங்கால கவிதைகளின் அடையாளம் இங்குதான் இருக்கிறது என்கிற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஆகவே நானும் அது போல எழுத ஆரம்பித்தேன். என் கவிதையைப் பார்த்துட்டு சி.சு.செல்லப்பா இதை நான் புதுக் கவிதை என்று ஒத்துக்க மாட்டேன் என்றார். நானும் அவரோடு விவாதம் செய்வேன். ஆனால் அவர் வைத்த வாதங்களோடு நான் முரண்பட்டதும் உண்டு.


ரசனை: சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் உங்கள் கவிதைகள் ஏதும் பிரசுரமாகியிருக்கிறதா?

சிற்பி: எழுத்து இதழில் நான் எழுதியது இல்லை. ஆனால் அதே காலக்கட்டத்தில் வெளிவந்த க.நா.சு வின் இலக்கிய வட்டத்தில் என்னுடைய கவிதை வெளிவந்திருக்கிறது. அந்தக் கவிதையின் தலைப்பு “காமக்கறங்கு” என்று நினைக்கிறேன். அவர் நம் கவிதையை அங்கீகரித்துவிட்டார் என்ற மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டது. ஆனால் க.நா.சு மேல் எனக்கு ஒரு இனந்தெரியாத பற்றும் வெறுப்பும் இருந்தது. பிற்காலத்தில் அவரை அழைத்து வந்து சொற்பொழிவு ஆற்ற வைத்த போது சொன்னார். நான் கவிஞர்கள் என்று பட்டியல் போடுவதையெல்லாம் நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ள கூடாது. நான் யாரை படித்தேனோ அவர்களை மட்டுமே பட்டியலிட்டுச் சொல்கிறேன். எனக்கு எல்லாக் கவிதைகளையும் பார்க்க வாய்ப்பில்லை என்று மிக வெளிப்படையாக பேசினார்.

எழுத்துக் காலக் கவிஞர்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளை எழுதியவர்கள் நகுலன், தருமு.சிவராம் (பிரமிள்), சுந்தரராமசாமி ஆகியோர். அதன் பிறகு கசடதபற இதழ் வெளிவந்தது. அதே காலத்தில் வானம்பாடியும் வெளிவந்து விட்டது. இவை இரண்டுக்குமிடையே மோதலும் முரண்களும் இருந்தன. ஆனால் நான் எல்லாத் தரப்பினரின் கவிதைகளையும் வரவேற்கிறவன். யாரிடத்தில் சிறந்த கவிதைப் பண்பு இருந்தாலும் அதை நான் மனதார வரவேற்பேன். இங்கு தகராறு நடந்து கொண்டிருந்த போது நான் சென்னையில் கசடதபற குழுவைச் சந்தித்தேன். ஞானக்கூத்தன், ந.முத்துச்சாமி, மகாகணபதி போன்றவர்களைச் சந்தித்துப் பேசினேன். அப்போ ஞானக்கூத்தன் உங்க கவிதை ஒன்று சொல்லுங்க என்று கேட்டார். நான் என்னுடைய கவிதை ஒன்றை சொன்னேன். அதைக் கேட்டு விட்டு உங்க கவிதைல ஒரு அனிமேஷனே இல்லையே என்றார். அப்புறம் நான் உங்க கவிதை ஒன்றைச் சொல்லுங்க என்றேன். அவர் சொன்னார். நான் உங்க கவிதையிலும் அனிமேஷன் இல்லையே என்றேன். பொதுவாக ஞானக்கூத்தனுக்கு கவிதையை நன்றாகவே வாசிக்க வராது. அதாவது பிரசண்டேசன் அவ்வளவா வராது. கவிதை படிப்பதென்பது ஒரு கலை அது எல்லோருக்கும் வாய்க்காது. ஞானக்கூத்தன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவரும் அப்போ வெளிவந்திருந்த எனது கவிதைத் தொகுப்பை பற்றியும் வானம்பாடிகளில் ஒருவராகிய தேனரசனின் கவிதைத் தொகுப்பை பற்றியும் கசடதபறவில் பாராட்டி எழுதியிருக்கிறார். அது ஒருவகையான நட்பு. இதில் சண்டை போட்டுக் கொள்வதெல்லாம் அக்னிபுத்திரனும் தர்மு சிவராமும்தான். நாங்க வேடிக்கை பார்ப்பதோடு சரி. இப்படியாக வானம்பாடி காலத்தில் இந்த கவிதை வடிவத்தை நாம் நம் நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி அதை உருவாக்கம் பண்ண வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது. வானம்பாடி தொடங்குவதற்கு முன்னால் இதழ் தொடங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருந்தது. அதாவது, முல்லை ஆதவன் ஒரு அமைப்பை வைத்திருந்தார். சிங்கநல்லூருக்கு பக்கத்தில் அப்ப ஒரு அமைப்பை உருவாக்கணும் ஒரு இதழ் நடத்தணும் என்றெல்லாம் முடிவு செய்திருந்தார்கள். அப்போது கு.வே.கி ஆசான் அவர்களின் கட்டிடத்தில்தான் நாங்க அடிக்கடி கூட்டம் நடத்துவோம். அவர் இடம் கொடுத்து உதவுவதோடு எங்களோடு கவிதை விவாதத்திலும் கலந்து கொள்வார். திடீரென்று எல்லாம் வானம்பாடி இயக்கத்தை தொடங்கவில்லை. தொடர்ந்து பல காலம் அங்கு கூடி விவாதிப்போம் கவிதை என்றால் என்ன? கவிதையை எப்படிப் புதிய நோக்கில் எழுத வேண்டும்? என்றெல்லாம் யோசித்தோம் விவாதித்தோம். அதன் பிறகு அமைப்பு ஆரம்பிக்கலாம் என்று முடிவு பண்ணிய போது என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி வந்தது. கவிஞர்.இளமுருகு வானம்பாடி எனப் பெயர் வைக்கலாம் என்றார் நான் அது ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கு அதனால் மானுடம் பாடும் என்ற அடைமொழியை சேர்த்து வைக்கலாம் என்றேன். இதழில் வானம்பாடி என மேலே போட்டிருக்கும் கீழே மானுடம் பாடும் விலையில்லாக் கவிமடல் என்று போட்டிருக்கும். அன்று கவிதை எழுதுவதில் ஒரு சோதனைத் தீவிரம் இருந்தது. வித்தியாசமான முறையில் கவிதை எழுத வேண்டும் என்ற வேகம் எங்களிடம் இருந்தது. வானம்பாடி இதழை 300 அல்லது 400 படிகள்தான் அச்சடித்தோம். ஆனால் அவை இலங்கை, மலேசியா, பம்பாய் என பல்வேறு பகுதிகளுக்கும் பரவியிருந்தது. இது எப்படி தெரிஞ்சது என்றால் பிற்காலத்தில் நான் பம்பாய் தமிழ்சங்கத்திற்குப் பேச போயிருந்த போது செம்பூர் தமிழ்ச் சங்கத்திற்கும் கூட்டிக் கொண்டு போனார்கள். அதன் செயலாளர் சொன்னார் அந்தக் காலத்தில் நான் வானம்பாடி இதழின் வாசகர் என்றார். அதைப்பற்றி ரொம்ப நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். மலேசியா போயிருந்த போதும் வானாம்பாடி இதழைப் படித்து விட்டு நாங்களும் வானம்பாடி என்ற பெயரில் ஒரு இதழ் நடத்தினோம் என்று சொன்னார்கள். ஈழத்திலிருந்து வானம்பாடி இதழில் மேமண்கவி போன்றோர் எழுதினார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஈழத்தில் அவர்களால் சுதந்திரமாக எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மாதிரி சூழ்நிலையில் கவிதைகளையும் நூல்களையும் எடுத்துக்கொண்டு பத்மநாப அய்யர் என்பவர் என்னை வந்து சந்தித்தார். இதை நூல்களாகப் பிரசுரம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்திருந்தார். அப்போது நாங்களே மிகவும் சிரமத்திலிருந்தோம். அப்போது கல்லூரி ஆசிரியர்களுக்கு பெரிதாக சம்பளம் இல்லை. ஆளுக்கு 10,20 எனப் போட்டுத்தான் இதழை நடத்திக் கொண்டிருந்தோம். கவிதைகளை வேண்டுமென்றால் கொடுங்கள் நாங்கள் இதழில் பிரசுரிக்கிறோம். புத்தகமாகப் போடுவதென்றால் சென்னையில் உள்ள பதிப்பகங்களை போய் பாருங்கள் என்று அனுப்பி வைத்தோம்.


ரசனை: வானம்பாடியின் 21வது இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதில் யாரெல்லாம் எழுதினார்கள். இப்போதுள்ள தீவிரத்தன்மை அந்த படைப்புகளில் வெளிப்பட்டதா?

சிற்பி: அந்த இதழில் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொ, அ.யேசுராசா, ஊர்வசி போன்ற கவிஞர்களின் கவிதைகள் அந்த இதழில் வெளிவந்தன. ஆனால் அந்தக் கவிதைகளில் தீவிரம் என்பதை விட வலியும் வேதனையும் இருந்தது. ஈழப்படைப்பாளிகளின் எழுத்தைப் புத்தகமாக கொண்டு வருவதில் பத்மநாப அய்யர் மிக தீவிரம் காட்டினார். அதன் பிறகு யுத்தம் தீவிரமானது. அங்கிருந்த படைப்பாளர்களில் பலரும் பல பகுதிகளுக்கும் சிதறிப் போனார்கள். பத்மநாப அய்யாரோடு அதன் பிறகு எனக்கு தொடர்பு ஏதும் இல்லை. அவர் உயிருடன் இல்லை என்றுதான் நான் நினைத்தேன். 1997ல் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் சொற்பொழிவாற்ற அமெரிக்காவுக்கு போயிருந்தேன். என் மனைவியின் தங்கை மகள் அப்போது லண்டனில் இருந்தார். வரும் வழியில் அவரைப் பார்த்துவிட்டு அங்கேயே தங்கி விட்டு வரலாம் என்று போயிருந்தேன். நான் அங்கு வருவதற்கு முன்பே பத்மநாப அய்யர் அதைத் தெரிந்து கொண்டு தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எனக்கு ஒரே ஆச்சர்யம். அப்போதுதான் அவர் உயிருடன் இருப்பதே தெரியும். நான் அங்கு அவரைச் சந்தித்த பிறகு வேறு பலரையும் சந்தித்தேன். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் நிலையை ஆழமாய் உணர முடிந்தது. அவர்களின் ஊக்கமும் உழைப்பும் எப்படி பட்டது என்பதை அங்கு நான் பார்க்க முடிந்தது. அதற்கு அவரே ஒரு உதாரணம். அவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வருபவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருந்தார். அப்போது நான் அங்கிருந்து ஒரு வாரத்தில் பாரிஸைச் சுற்றிப் பார்க்கலாம் என்று டூரிஸ்ட் விசா எடுத்திருந்தேன். அங்கு தனியாக போய்ப் பார்க்க எனக்கு யாரையும் தெரியாது. பத்மநாப அய்யரிடம் சொன்னேன் அவர் ஈழத்து நண்பர் ஒருவரை அங்கு சந்திக்க ஏற்பாடு செய்தார். அந்த நண்பர் சொன்னார். உங்கள் பயணம் முழுதும் நான் கூடவே இருக்க முடியாது. நான் ஒரு வேலையில் இருக்கிறேன். அதனால் மெட்ரோ ரயில் மூலமாகவே பாரிஸ் முழுதையும் யார் துணையுமின்றிச் சுற்றிப்பார்க்கலாம். அதற்கான முறைகளை நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றுப் பல வழிமுறைகளையும் சொன்னார். அவரும் சில இடங்களுக்கு நேரடியாகக் கூட்டிப் போய்க் காட்டினார். இறுதியாக அவர் என்னை விட்டுப் பிரியும் போது சொன்னார். ஐயா, நான் உங்களுக்கு ஒரு தேநீர் மட்டும்தான் வாங்கித் தர இயலும் என் பொருளாதாரம் அவ்வளவுதான் என்றார். இதைக் கேட்டவுடன் என் மனது பாரமாகி விட்டது. அப்போது அவரிடம் ‘என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்டேன் . ஐயா, நான் அதைச் சொல்ல மாட்டேன். இன்ன வேலை என்றில்லை. எல்லா வேலைகளையும் செய்கிறோம் என்றார்.


ரசனை: வானம்பாடி கவிதை இயக்கத்தில் இருந்த கவிஞர்களில் முக்கியமான கவிஞர் நீங்கள். வானம்பாடி இயக்கம் எப்படித் தோன்றியது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் ஏன் அது தொடர்ந்து இயங்கவில்லை?

சிற்பி: வானம்பாடியை ஒரு இயக்கமாக நடத்தவேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கமாக இருந்தது. இடது சாரி சிந்தனைகளுக்கு அழுத்தம் கொடுத்து எழுதுவது கொள்கையாக இருந்தது. ஆனால் அதில் இருந்த எல்லோரும் பொதுவுடமை இயக்க சிந்தனையாளர்கள் அல்ல. உதாரணமாக மு.மேத்தா காங்கிரஸ் அனுதாபி, அது போல தமிழ் உணர்வுச் சிந்தனையாளர்களும் இதில் இருந்தார்கள். இதில் மையமாக இருந்து இயங்கியவர்களில் கோவை ஞானி, புவியரசு, ஜன.சுந்தரம் போன்றவர்கள்தான் மார்க்சிய சிந்தனையாளார்கள். மற்றவர்கள் எல்லாம் அதன் அனுதாபிகளாகவும் புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.வானம்பாடி இதழில் கவிதைகளை வெளியிடும் போது விவாதித்துதான் ஒவ்வொரு இதழிலும் கவிதைகள் வெளிவந்தன. ஒரு குறிப்பிட்ட காலம்-10 இதழ்களுக்கு மேல் வெளிவந்த பிறகு கொஞ்சம் கருத்து வேறுபாடுகள் வந்ததன. அந்தச் சூழ்நிலையில், ஞானி என்ன சொன்னார் என்றால் முழுக்க முழுக்க மார்க்சிய சிந்தனை சார்ந்த படைப்புகளைத்தான் பிரசுரிக்க வேண்டும் அது அல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்றார். அப்போது என்னைப் போன்ற ஆட்கள் என்ன சொன்னோம் என்றால். இது ஒரு இலக்கிய இயக்கம் அரசியல் இயக்கம் அல்ல. அரசியல் அனுதாபமுடைய ஒரு இலக்கிய இயக்கம். இலக்கிய இயக்கம் என்பது இலக்கியம் சார்ந்துதான் இயங்க வேண்டும். தத்துவமா? இலக்கியமா? என்று வந்தால் இலக்கியத்தில் அடிப்படையில் கவித்துவம் வேண்டும். கவித்துவத்தோடு தத்துவமும் இருந்தால்தான் ரசிக்க முடியும். வெறும் தத்துவம் கவிதை ஆகாது என்றேன். என்னைச் சார்ந்த கருத்தோடு பலர் இருந்தார்கள். அதில் புவியரசுக்கு ஒரு தவிப்பு இருந்தது. பிறகு எங்களோடு இணைந்து கொண்டார். இது அடிப்படையாக நிலவிய கருத்துவேறுபாடு என்று சொல்லலாம். ஒவ்வொருத்தரும் ஏன் அப்படி நினைத்தார்கள் என்று எனக்கு தெரியாது. இது ஒரு கடும் பிரச்னையாக இருந்தது. இதைப் பேசித் தீர்க்கவேண்டும் என்று ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம். அதில் ஞானி, அக்கினி புத்திரன், இளமுருகு இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும். நான் புவியரசு மேத்தா எல்லாம் ஒரு பக்கமாகவும் இருந்து பேசினோம். சமாதான நோக்கோடு நான் நடுநிலையோடு பேசினேன். அப்போது பேசிக் கலைந்ததோடு சரி ஒன்றும் சரியாகவில்லை. கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது வேறு ஒரு இதழும் வந்து கொண்டிருந்தது. புதிய தலைமுறை என்று நினைக்கிறேன். இதை ஞானி, ராசியண்ணன் போன்றவர்கள் நடத்தினார்கள். அதில் நீங்கள் என்ன வேண்டுமானலும் எழுதிக் கொள்ளுங்கள் அதைப் பற்றி கவலையில்லை. வானம்பாடியில் அது மாதிரி வேண்டாம் என்ற முடிவிலேயே இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரச்சனை ஓயவில்லை. முற்றிக் கொண்டே வந்தது. இறுதியில் வானம்பாடியை நடத்துவதா வேண்டாமா என்ற நிலை வந்த போது நான் 10ம் இதழில் ஒரு தலையங்கம் (முத்திரைகளும் முகத்திரைகளும்) எழுதினேன். வானம்பாடியை இப்படித்தான் நடத்த வேண்டும் என்கிற மையக் கருத்தோடு அதை எழுதியிருந்தேன். அதன் பிறகு நிரந்தரமான பிரிவு அதனால் இதழை நான் பொள்ளாச்சிக்கு கொண்டு போய் நடத்தினேன். பிறகு அவர்கள் வெளிச்சம் என்ற இதழை துவங்கினார்கள். அது இரண்டு இதழ்கள்தான் வந்தது. அதற்கிடையில் வெளிச்சம் என்ற பெயரில் வானம்பாடிகளுடைய கவிதைத் தொகுப்பு ஒன்று வந்தது. அதைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை கவிஞர்.தமிழ்நாடன் செய்தார். அந்தத் தொகுப்பில் தொகுப்பாசிரியரான ஞானி தனக்கு தெரியாமல் சில கவிதைகள் சேர்க்கப்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டினார். இதிலிருந்து மன ஒற்றுமை இல்லை என தெரிந்து விட்டது. இதழ் என் கைக்கு வந்த பிறகு சில மாற்றங்கள் செய்து நடத்தினேன். பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு கவிதைகள். தர்மு சிவராமு, ல.சா.ரா. போன்றவர்களிடம் நேர்முகம் கண்டு வெளியிட்டோம். பிறகு அவரவர் சொந்த முயற்சியில் ஈடுபட்ட போது ‘வானம்பாடி’ நின்று விட்டது.


ரசனை: வானம்பாடி இயக்கம் நின்று போனதிற்கு எமர்ஜென்சி காலம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்போது என்ன மாதிரியான நெருக்கடிகள் இருந்தன?

சிற்பி: ஆமாம். நெருக்கடி நிலைக் காலம் ஒரு காரணம். நெருக்கடி நிலையை ஆதரித்தவர்களும் எதிர்த்தவர்களும் என இரு சாரர்களும் இதில் இருந்தார்கள். பொதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இதை ஆதரித்தார்கள். மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் இதை எதிர்த்தார்கள். எதிர்த்தோரில் கோவை ஞானி, அக்கினி புத்திரன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அதை ஆதரித்தவர்களில் நான் புவியரசு போன்றவர்கள் ஒரு அணியாக இருந்தோம். இந்தப் பிளவு ஏற்படுவதற்கு புவியரசு தொகுத்த ‘இந்திரா இந்தியா’ ஒரு காரணம். இந்திராவைப் பற்றிய பத்திரிக்கை செய்திகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக கொண்டு வரும் முயற்சி நடந்தது. அதற்கு தொகுப்பாசிரியராக இருந்தவர் தமிழ் நாடன். இது தேவையில்லாத வேலை என சிலர் சொன்னோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. இதைப் பற்றியெல்லாம் மாற்று அணியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆரம்பத்தில் எமர்ஜென்சியை ஆதரித்தோம். ஆனால் அது போகப் போக வேறு மாதிரியாகப் போனது. கடைசியில் அதற்கு துணை போனவர்களாக ஆகி விட்டோம். அரசின் வானொலி, செய்தித் துறை போன்றவை எங்களை நன்றாகப் பயன் படுத்திக் கொண்டார்கள். இந்திராவின் 20அம்ச திட்டத்தை ஆதரித்து கவியரங்கம் நடத்தினோம். கிராமங்களுக்குச் சென்று மேடைப் பிரச்சாரம் எல்லாம் செய்தோம். இதைப் பிரமாதமாக வானொலியில் ஒளிபரப்பினார்கள். திருச்சியில் பெரிய அளவில் 20 அம்ச திட்டத்தை ஆதரித்துக் கவியரங்கம் எல்லாம் கூட நடந்தது. நெருக்கடி நிலை காலத்தில் எங்கள் பணி தவறாகத்தான் போய் விட்டது.

ரசனை: வானம்பாடி இயக்கம் நகசல் பாரி இயக்கதிற்கு ஆதராவானது எனக்கருதி காவல் துறையின் அடக்கு முறைக்கு ஆளானது என்று சொல்லப்படுகிறது. இந்த அடக்கு முறைக்கு பயந்து பல கவிஞர்கள் ஒதுங்கிக் கொண்டதாகவும் புவியரசு, ராசியண்ணன் போன்றவர்கள் போலிஸ் கஸ்டடியில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என சொல்லப்படுகிறதே?

சிற்பி: அப்படி இல்லை. நகசல் பாரி இயக்கம் வடக்கில் வளர்ந்தது அது கோவையிலும் மையம் கொண்டிருந்தது. இந்த இயக்கத்தோடு ஞானி, ராசியண்ணன் போன்றவர்களுக்குத் தொடர்பு இருந்ததாக பேசப்பட்டது. வலது சாரியாக பிரிந்திருந்த எங்களுக்குத் தொடர்பு கிடையாது. ஆனால் போலிஸ்காரர்களுக்கு வலது இடது என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆகவே அவர்களுடைய விசாரணை எல்லைக்குள் நாங்களும் இருந்தோம். அப்போது இந்த வீட்டில் கீழே உள்ள முன்அறையில்தான் நான் படுத்திருப்பேன். அப்போது நக்சல் இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் நடு இரவில் வந்து கதவை தட்டுவார்கள். அப்போது அவர்கள் சொல்வார்கள். தமிழ்நாட்டில் போலிஸாரால் நாங்கள் வேட்டையாடப்படுகிறோம். அதனால் கேரளப் பகுதிக்குத் தப்பி செல்ல இருக்கிறோம் ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் மீது எங்களுக்கு அனுதாபம் இருந்தது. ஆனால் அவர்கள் இயக்க நெறிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனினும் அவர்களை மனமார ஆதரித்தவர்களும் எங்களில் இருந்தார்கள். எங்களில் பலர் பெரும்பான்மையினரின் நன்மைக்காக சில தீவிரமான செயல்பாடுகளை ஆதரிப்பதில் தவறில்லை என்ற அளவிற்கு சிந்தித்திருந்தோம். மற்றபடி அவர்களின் தீவிரவாத நெறியை ஆதரித்ததுக் கிடையாது.

ரசனை: இந்த கருத்துக்களோடு புவியரசு, அக்கினி புத்திரன் போன்றவர்களுக்கு உடன்பாடு இருந்ததா?

சிற்பி: இல்லை. ஞானியும், ராசியண்ணனும் தான் தீவிரமாக இருந்தார்கள். அதனால் போலிஸ் விசாரனைக்குட்படுத்தபட்டார்கள். அப்போது நடந்ததாக சொல்லப்படும் செய்திகள் எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியாது. ஞானி தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்லி விட்டதாக சொன்னார்கள். ராசியண்ணன் தான் கடுமையாக பாதிக்கப்பட்டவர். போலிஸ் அவரை அடித்து நொருக்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் கடும் துன்பங்களை ராசியண்ணன் தான் அனுபவித்தார். கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் சிறைகளில் எல்லாம் கொண்டு போய் வைத்து கொடுமைப்படுத்தினார்கள். ஞானி, ராசியண்ணன் போன்றவர்கள் நக்சல்களின் பொதுவுடமைக் கருத்துகளோடு உடன்பாடு கொண்டிருந்தார்களே தவிர அவர்களின் சட்டத்திற்குப் புறம்பான தீவிர செயல்களுக்கு ஆதரவு தெரிப்பவர்கள் அல்ல. சமுதாய மாற்றத்திற்கு துணைபுரியக்கூடிய கருத்துகளைத் தான் நாங்கள் ஆதரித்தோம். நக்சல் இயக்க திகம்பரக்கவிகளை நாங்கள் நேசித்தோம். அவர்களைப் போல வர வேண்டும் என நாங்கள் ஆசைப் பட்டோம். இப்படி இலக்கிய ரீதியாகதான் எங்கள் செயல் பாடுகள் இருந்தன. அரசியல் ரீதியாக இருந்தது என்று சொல்ல முடியாது. புவியரசு தீவிரமாக பேசுவார் என்பதாலேயே அவரும் விசாரணை எல்லைக்குள் வந்ததுண்டு ஆனால் ராசியண்ணன் தீவிரமாக அதில் பாதிக்கபட்டிருந்ததால் எங்களோடு இரண்டாண்டுகளாக அவருக்குத் தொடர்பில்லை. பல விசாரணைகளுக்குப் பிறகு ராசியண்ணனுக்கு நக்சல்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என விடுதலை செய்யப்பட்டார். கவிதைப் பற்றிய கருத்து, நெருக்கடி நிலை, தனிமனித உணர்வு இப்படிப் பல காரணங்களால் வானம்பாடி இயக்கம் உடைந்தது. தனி மனித விருப்பு வெறுப்புகளும் இருந்தது. எப்படி என்றால் கங்கைகொண்டான் என்ற இளைஞர் வேளாண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரும் வானம்பாடியில் எழுதினார். மு.மேத்தாவும் எழுதினார். இதில் மு.மேத்தா ரொம்ப பாப்புலர் ஆனவர். அவருக்கு தனியான ரசிகர் கூட்டமே இருந்தது. கங்கை கொண்டான் வானம்பாடிகளில் கொஞ்சம் நவீனத்தோடு கவிதை எழுதக் கூடியவர். இப்படி இளைஞர்கள் எல்லாம் பேர் வாங்க கூடிய அளவிற்கு எழுதுகிறார்கள் என்ற கருத்து வயதில் மூத்தவர்களுக்கு இருந்திருக்க கூடும்.
ஞானி ஒரு படைப்பளர் அல்ல. அவர் ஒரு திறனாய்வாளர். அவர் வானம்பாடியில் கல்லிகை என்ற தலைப்பில் ஒரே ஒரு கவிதைதான் எழுதினார். அதுமாதிரியே ஜன.சுந்தரம். இம்மாதிரியான இயக்கங்களில் படைப்பாளர்கள்தான் முதன்மையாக கருதப்படுவார்கள். திறனாய்வாளர்கள் இரண்டாம்பட்சமாகத்தான் கருதப்படுவார்கள். இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு காரணமாக இருந்திருக்க கூடும். இதனாலும் அந்த இயக்கத்தில் பிளவு வந்திருக்கலாம். அந்தக் காலத்தில் மு.மேத்தாவின் கவிதைகள் தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி என்ற கவிதை தீபம் இதழில் வெளிவந்தது. காந்தியைக் கடுமையாக மறுக்கிறவர்கள் அந்த அமைப்பில் இருந்தார்கள். காந்தியை தேசப்பிதா என்று போற்றி கவிதை எழுதினால் அவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?. இந்த மாதிரி விஷயங்களை ஞானி தீவிரமாக விமர்சிக்க கூடியவர். எந்த கொள்கையை ஆதரிக்கறாரோ அதை அழுத்தமாகச் சொல்லக் கூடியவர். ஒரு எடுத்துக்காட்டாக அந்தக் காலத்தில் சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள உலகம் முழுதும் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். தமிழ்நாடு முழுதும் சுற்றிப்பார்க்க அவர்கள் அழைத்துச்செல்லபடும் போது கோவைக்கும் வந்திருந்தார்கள். அப்போது நானும் புவியரசுவும் இன்னும் சில கவிஞர்களும் அவர்கள் முன்னிலையில் கவிதை வாசிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இதை ஏற்பாடு செய்திருந்தது பி.எஸ்.ஜி கல்லூரி ஜி.ஆர்.தாமோதிரன். நாங்கள் கவிதை வாசித்து விட்டு திரும்பி வந்தோம். எப்போதும் நாங்கள் சங்கமிக்க கூடிய இடம் ரயில்நிலையம் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய டீக்கடை. அந்தக் கடையில் டீ சாப்பிட அமர்ந்திருந்த போது ஞானி வந்தார். எல்லாரும் எங்க போயிட்டு வர்றீங்க என்றார்? சொன்னோம். உடனே ஞானி கோபத்தோடு. எவனோ ஒரு பூர்ஷ்வா நடத்தறான் அங்க போய் நீங்க கவிதை வாசித்து விட்டு வந்தீங்களோ என்றார். இப்படித்தான் அவர் பேசுவார் என்றாலும் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நாங்கள் பழகுவோம். சாதரண விஷயங்களைக் கூட கடுமையாக விமர்சிப்பார். அவரைப் பொறுத்தவரை மார்க்சிய-கம்யூனிச சிந்தனைகள் இல்லாத எழுத்துகளை அவர் ஆதரிக்க மாட்டார். ஆனால் வானம்பாடியில் பல வகையான கவிதைகள் வந்திருக்கு. அது அவருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் வானம்பாடி இதழ் நின்று போன கொஞ்சகாலம் கழித்து இது போன்ற எல்லா வகையான கவிதைப் போக்குகளையும் அவர்தான் முந்திக் கொண்டு ஆதரித்தார். சுந்தரராமசாமி கவிதை உட்பட. இது என்ன என்றே என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் இதில் எனக்கு உடன்பாடுதான். இந்தக் கருத்து எனக்கு ஏற்கனவேயிருந்தது. இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கருத்து இருக்கும் அது அவர்களுடைய சுதந்திரம். இதுதான் என்னுடைய கருத்தும் கூட. ஆனால் இதை நான் சொன்ன போது ஞானி ஏற்றுக் கொள்ளவில்லை. எதிர்த்தார். எதையெல்லாம் பூர்ஷ்வா படைப்பு என்று சொன்னாரோ அதையெல்லாம் அதன் பிறகு ஆதரிக்க துவங்கினார். அதன் பிறகுதான் ஞானியை மற்றவர்கள் அங்கீரிக்க ஆரம்பித்தார்கள். சுந்தரராமசாமி, ஞானகூத்தன் போன்றவர்களின் படைப்புகளை பற்றியெல்லாம் இவர் மறுபார்வை பார்க்கத் துவங்கினார். அந்த மறுபார்வை ஆரோக்யமானது. இதைப் பார்த்தவுடன் சுந்தரராமசாமி, ஞானகூத்தன் போன்றவர்கள் ஞானி மாதிரி திறந்த மனம் உடையவர்கள் யாருமில்லை என்று பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.



ரசனை: எழுத்து, கசடதபற, மீட்சி, கொல்லிப்பாவை, போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கும் வானம்பாடியில் எழுதிக் கொண்டிருந்தவர்களுக்கும் இடையே எது கவிதை என்று ஒரு சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருந்தது அது பற்றி கூற முடியுமா?

சிற்பி: வானம்பாடி என்ற கட்டு உடைந்தவுடனேயே அந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து விட்டது. வானம்பாடி எல்லாத் தரப்புக் கவிதைகளுக்கும் இடமளிக்கக் கூடிய இதழாகத்தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை இது போன்ற மாற்றுச் சிந்தனைகளை ஆதரிக்க கூடியவனாகத்தான் இருந்திருக்கிறேன். ஞானக்கூத்தன் கவிதைகள் எனக்கும் பிடிக்கும். அவைகளைப் பற்றி மேடையில் பேசியிருக்கிறேன். சுந்தரராமசாமி கவிதைகளும் அப்படித்தான். ஆனால் மேடையில் அவர்கள் எங்களை விமர்சனம் செய்து பேசுவதும் எழுதுவதும் தொடர்ந்தது. இப்போதும் ஜெயமோகன் போன்றவர்கள் வானம்பாடி கவிதைகளைப் பற்றி சவுக்கடியோடுதான் விமர்சனம் செய்வார்கள். வானம்பாடியில் நல்ல கவிதைகள் நிச்சயமாக எழுதப்பட்டன. எல்லோருடைய கவிதைகளும் நல்ல கவிதை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருமையான கவிதைகள் வெளிவந்துள்ளன. ஒரு கவிஞர் “வெந் துயர் முள் மன வேலிகளில்” என எழுதினார். இப்போது ஈழத்தமிழர்கள் முள்வேலிக்கு பின்னால் இருப்பதை பார்க்கும் போதெல்லாம் இந்தக் கவிதை எனக்கு ஞாபம் வரும். இப்படி நல்ல கவிதைகள் எழுதியவர்கள் எல்லாம் பின்னால் எழுதாமல் போய்விட்டார்கள். ஆனால் எது கவிதை என்பதில் ஒரு சர்ச்சை அன்றும் இருந்தது இன்றும் இருக்கிறது.

ரசனை: வானம்பாடி என்பது ஒரு கவிதை இயக்கமாக இருந்ததா? அல்லது அந்த இதழுக்கான பெயராக மட்டும் இருந்ததா?

சிற்பி: வானம்பாடி என்ற பெயர் இதழின் பெயர் என்றாலும் அது ஒரு கவிதை இயக்கமாகத்தான் இருந்தது. பெரிதும் மார்க்சிய சிந்தனை உடைய ஒரு கவிதை இயக்கமாக இருந்தது. நிறையப் பேரை கவிதை எழுதத் தூண்டிய ஒரு இயக்கமாக வானம்பாடி இயக்கம் இருந்தது. இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு கவிதை எழுத யோசித்துக் கொண்டிருந்தவர்களை எல்லாம் கவிதை எழுத வைத்தது. புதுக்கவிதை பேச்சு மொழிக்கு சமமாக இருந்ததால் பரவலாக வாசிக்கப்பட்டது. கவிதைகளை வெளியிடக்கூடிய பல சிற்றிதழ்கள் வெளிவருவதற்கு வானம்பாடி இதழ் ஒரு முன்னோடி எனலாம். வானம்பாடி இதழ் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே வெளிவரக்கூடிய இதழாக இருந்தது. நான் தான் இடையில் நேர்காணல், மொழிபெயர்ப்பு என்று கொஞ்சம் இயங்கினேன். இந்த இயக்கத்தில் விமர்சகர்கள் பலர் இருந்த போதும் இதழில் மிகுதியாக விமர்சனங்கள் இடம் பெறவில்லை. வந்த சில விமர்சனங்கள் கவனத்துக்குள்ளாகவில்லை.

ரசனை: வானம்பாடி இயக்கம் நின்று போன பிறகும் அதில் இயங்கிய பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்று இருக்கிற புதிய தலை முறை கவிஞர்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு கவிதை இயக்கமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏன் தோன்றவில்லை?

சிற்பி: அதற்கு காரணம் வயது. அந்த வயதில் இருந்த வேகம் இப்போது இல்லை. இந்தத் தளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதன்பிறகு ஏனோ எந்த இயக்கமும் இங்கு தோன்றவில்லை. சிலர் உதிரி உதிரியாக சிறு குழுக்களாக தோன்றினர் ஆனால் அது எதுவும் தனித்தன்மையான இயக்கமாக மாறவில்லை. வானம்பாடி இயக்கத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து இயங்க பணிகள் தடையாக இருந்தன என்றாலும் சி.ஆர்.ரவீந்திரன் நாவலில், தமிழ்நாடன் சிற்ப, ஓவிய, பழைய நூல் கண்டெடுத்தல் முதலிய துறைகளில், புவியரசுவும் நானும் கவிதை மற்றும் மொழிபெயர்ப்பில் என அவரவர்கள் இலக்கியத்தில் தனித்தனியாக தங்களது பங்களிப்பை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரசனை: இப்போது அதிகமான எண்ணிக்கையில் பெண்கவிகள் கவிதைகளை எழுதி வருகிறார்கள். அவர்களின் கவிதைகளில் பெண் உடலரசியல் வெளிப்படையாக பேசப்படுகிறது. இது ஆபாசம் என சில கவிஞர்களால் விமர்சிக்கப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கறீர்கள்?

சிற்பி: பிரச்சனைகளின் அடிப்படையில் உருவானவர்கள் பெண்ணியக் கவிஞர்கள். அவர்களால் ஒரு மொழியை வார்த்தெடுக்க முடிந்திருக்கிறது. கனிமொழியின் மொழி வேறு, உமா மகேஸ்வரியின் மொழி வேறு, சல்மாவின் மொழி வேறு என அடையாளம் காண முடியும். ஆண் கவிஞர்களைக் காட்டிலும் பெண் கவிஞர்கள் தங்களுக்கென்று அடையாளம் காட்டும் ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக குட்டி ரேவதியின் கவிதை மொழி. ஆண் கவிஞர்களில் இப்படி தனித்துவமாக இருக்க கூடியவர்கள் குறைவு. பெண் கவிஞர்கள் சில விஷயங்களைக் கவிதைகளில் வெளிப்படையாக எழுதுகிறார்கள் என்பதால் யாரும் விமர்சிக்க முடியாது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் சுதந்திரத்தை முழுமையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை. அவர்களும் இதையையே எழுதிக் கொண்டிருக்க போவதில்லை. மற்ற விஷயங்களை அவர்கள் எழுத முன்வரும் போது நன்றாகத்தான் எழுதுவார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால் சாகித்ய அகாடெமி அமர்வுகளுக்காக பெங்களூர், கோவா போன்ற இடங்களில் சல்மாவை அழைத்து கவிதை வாசிக்கச் சொன்னோம். எல்லா இடத்திலும் யோனி குறித்த ஒரு கவிதையைத் தவறாமல் வாசிக்கிறார். தமிழில் அவர் வாசிக்கிறார். அதையே ஆங்கிலத்தில் இன்னொருவரை வாசிக்கச் சொல்கிறார். அகில இந்திய அளவில் சல்மா, கனிமொழி, குட்டி ரேவதி, அ.வெண்ணிலா போன்றவர்களை அறிந்திருக்கிறார்கள். பெண் கவிஞர்களுக்கு மேடையில் கவிதை வாசிப்புத்திறன் போதாது. இதில் தமிழச்சி தங்கபாண்டியன் மாறுபட்டவர். காரணம் அவர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் அந்த வெளிப்பாடு இருக்கிறது. இன்றைக்கு பெண் எழுத்து என்பது குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறது என்றுதான் சொல்லுவேன். இதில் சல்மா, உமா மாகேஸ்வரி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, ஈழத்துப் பெண்கவிஞர் அனார், குட்டி ரேவதி, மாலதி மைத்ரி போன்றவர்கள் தனித்துவமான மொழி நடை பெற்ற கவிஞர்கள் என்று உறுதியாக நான் சொல்வேன்.

ரசனை: கவிதை, கட்டுரை என்று இரு வடிவங்களுக்குள்ளேயே நின்று விட்டீர்கள். ஏன் சிறுகதை, நாவல் என முயற்சிக்கவில்லை?

சிற்பி: என்னுடைய கவிதைகளில் கதைத் தன்மை இருக்கும். சிறுகதை பாணியில் எழுதியிருக்கிறேன். ஆனால் சிறுகதை, நாவல் எனப் பயணப்படவில்லை. ஜெயகாந்தன் ஒரு குறுநாவலையாவது எழுதுங்கள் என வற்புறுத்தினார். நான் எனக்கு கதை எழுத வராது என்று சொன்னேன். எல்லோரிடத்திலும் ஒரு கதை இருக்கு அதை நீங்கள் நினைத்தால் எழுதலாம் என்று சொன்னார். இருக்கலாம். ஆனால் கதைக்குரிய லாவகத்தோடு எழுத முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாக நாவல், சிறுகதை வாசிப்பதை விட நான் தேடிப் படிப்பது கவிதைதான். சமீபத்தில் ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதைத் தொகுப்பை படித்தேன் மிகச் சிறப்பாக உள்ளது. அதிகம் விவாதிக்கப்படும் நாவல்களை நிச்சயம் படிப்பேன்.

ரசனை: இப்போது எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களில் யாரை சிறப்பானவர்களாக குறிப்பிடுவீர்கள்?

சிறுகதையைப் பொறுத்தவரை இப்போது நிறையப் பேர் எழுதுகிறார்கள். நாவலில் ஜே.டி.குரூஸின் ஆழி சூழ் உலகு, ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ஆகிய நாவல்கள் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியவை. ஆனால் நாவலை ஒரு கலைஓவியமாக்கி அதை வாசிக்கும் வாசகனைத் தன்வயப்படுத்தி இழுத்துக் கொண்டு போகும் எழுத்தாளர் என்றால் அது எஸ்.ராமகிருஷ்ணன்தான். அவரது கதைகள், கட்டுரைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும். அப்படியொரு வசீகரமான நடையில் எழுதும் எழுத்தாளர் அவர். ஜெயமோகனின் கதைகளில் எனக்கு முழு ஈடுபாடு வரவில்லை. காரணம் ஏனென சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒரு மனத்தடை இருக்கு. தேவையில்லாமல் கதையை ரொம்ப பெரிதாக எழுதுகிறாரோனு தோணுது. அவர் எழுதியதில் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலும் காடு நாவலும் எனக்குப் பிடித்திருந்தது. பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலில் கம்யூனிசத்தின் மீது விமர்சனங்களை வைக்கிறார். அதை ஏன் எப்படி என்கிற கேள்விகளோடு கொண்டு போகும் விதம் பிடித்திருந்தது. காடு ஒரு கச்சிதமான நாவல். விஷ்ணுபுரம் எனக்கு குழப்பமாகத்தான் இருந்தது அதன் பிறகு கொற்றவை அதை அவர் கவிதை என்று வேறு சொல்கிறார். ஆனால் அது கவிதையில்லை உரைநடைதான். சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் டெக்னிகலி வித்யாசமான நாவல் ஆனால் ஒரு புளிய மரத்தின் கதையை ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு நாவல் எனலாம். வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம், பாரதியின் வேப்பமரம் என்ற கதைகளின் தூண்டுதலோ என்னவோ ஒரு புளிய மரத்தின் கதை நாவலில் இதன் பாதிப்பு அவருக்குள்ளும் இருந்திருக்கலாம். அதோடு சுந்தரராமசாமியின் கதைப்பாணி அழுத்தமாக இருப்பதால் இது ஒரு நல்ல நாவல். ஆனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற நாவலை படிக்க முடியவில்லை. அவரது மற்ற நாவல்களோடு இதை ஒப்பிட முடியவில்லை. ஆனால் அவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவரது நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பு எனை மிகவும் கவர்ந்தது. அதில் அவர் ‘காலம்’ என ஒரு கவிதை எழுதியிருப்பார். அந்த பாதிப்பில் நானும் ‘காலம்’ எனும் ஒரு கவிதை எழுதினேன். எனது பூஜ்யங்களின் சங்கிலி என்ற கவிதைத் தொகுதி கூட காலம் பற்றியதுதான். அந்த கவிதைக்கான தூண்டுதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சுந்தரராமசாமியின் கவிதையும் ஒரு அடிப்படையான காரணம்.

காலமோ
மாயை என்றான் சங்கரன்
லீலை என்றான் அரவிந்தன்
அறிந்தறிந்தும் பாகனையே
கொல்லும் யானையது... என்று ஆரம்பிக்கும் அக்கவிதை.

குறையாத ஜாடியினின்றும்
நிறையாத ஜாடிக்குள்
வில்லாய் வளைந்து விழும்
கட்டித்தேன் பெருக்கு ... என்று கூறும் பாங்கு மிக ஆழமானது.

விளங்க முடியாததை விளங்குவதற்கான முயற்சி அந்தக் கவிதை. சொல்லுக்குள் அடங்காத கால தத்துவத்தை அந்தக் கவிதையில் சொல்கிறார்.

தமிழில் குறைவான கவிதைகள் எழுதியிருந்தாலும் நிறைவான கவிதைகள் சுந்தரராமசாமியின் கவிதைகள். அவரின் காகங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். அவரது வீட்டில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கி நிறைய உரையாடியிருக்கிறேன். அன்போடு உபசரிக்கக் கூடிய நண்பர். ஒரு முறை திருவனந்தபுரத்தில் பத்து நாட்கள் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் உள்ள கவிதைகள் மொழி பெயர்ப்பு நடந்தது. அதில் தமிழ்க் கவிதைகளை தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பு செய்வதில் நான், சுந்தரராமசாமி, க.நா.சு, அப்துல்ரகுமான் ஆகியோர் இருந்தோம். அப்போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் சில கூட்டங்களில் அவரை விமர்சனம் செய்து பேசியிருக்கிறேன். அதையெல்லாம் கேள்விப்பட்டு எனக்கு ஒரு கடிதம் கூட எழுதியிருந்தார். இது குறித்து நேரில் சந்தித்த போது கேட்டார். நான் சொன்னேன் தமிழ் பேராசிரியர்களுக்கு இலக்கியம் குறித்து ஒன்றும் தெரியவில்லை என நீங்கள் பேசியதற்குதான் பதில் கூறியிருந்தேன். பேராசிரியர் பணி என்பது ஒரு தொழில் அதில் ஈடுபாடோடு செய்கிறவர்களும் உண்டு. அப்படி செய்யாதவர்களும் உண்டு. ஆசிரியர்களாக இருப்பவர்கள் நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டுமே தவிர நல்ல இலக்கியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை. அதில் சிறந்த இலக்கியவாதிகளும் இருந்திருக்கிறார்கள். தெ.போ.மீ., வையாபுரிப்பிள்ளை போன்றவர்களும் பேராசிரியர்கள்தான் அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை எனக்கூற முடியுமா? எல்லாத் துறைகளிலும் வல்லுனர்களும் இருக்கிறார்கள். அப்படி அல்லாதவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது எனச் சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது எனச் சொன்னேன்.

ரசனை: தமிழ்ப் பேராசிரியர்கள் குறித்து சு.ரா. சொன்ன அதே கருத்தை இப்போதும் கோவை.ஞானி மேடைகளில் பேசி வருகிறாரே...

சிற்பி: அதற்கும் இதே பதில்தான். ஏனெனில் பேனர் வரைபவரும் இருக்கிறார். ஓவியம் வரைபவரும் இருக்கிறார். இதில் பேனர் வரைபவர்கள் அதிகம். ஓவியம் வரைபவர்கள் குறைவு. எல்லாத் தொழில்களிலும் இது உண்டு. ஆனால் ஆசிரியத் தொழிலை செய்கிறவர் அவரது பணியைச் சிறப்பாக செய்தால் போதும். பேராசிரியர்களாக இருந்தவர்கள் பலர் சிறந்த இலக்கிய படைப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள் என என்னால் அடையாளம் காட்ட முடியும். இது எல்லாத் தொழில்களிலும் இருந்து வருகிற நிலை. எல்லோருமே நவீன இலக்கியத்தை போற்றுவார்கள் என எதிபார்க்க முடியாது.

ரசனை: தமிழ்க்கவிஞர்களில் படைபிலக்கியத்திற்காகவும் மொழிபெயர்ப்புக்காகவும் இரண்டு சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றிருப்பவர் நீங்கள் இது எப்படி சாத்தியப்பட்டது?

சிற்பி: என்னைப் போன்றே நீல.பத்மநாபன், புவியரசு போன்றவர்கள் இரண்டு விருதுகள் பெற்றுள்ளார்கள். ஆனால் எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. காரணம் பொள்ளாச்சியில் ஒதுக்குபுறமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் நான். ஆகவே எனக்கு மையமான இந்தக் களங்களோடு தொடர்பு கிடையாது. “பக்தி செய்து பிழைக்க சொன்னாள் பயன் எண்ணாமல் உழைக்க சொன்னாள்...” என்று பாரதி சொன்னான். அதே மாதிரி பயன் கருதி எதையும் நான் எழுதுவதில்லை. விருதுகள்தான் முக்கியம் என்றால் இலக்கியத்தில் இருக்கத் தேவையில்லை. அரசியலுக்கு போனால் எல்லா விருதுகளும் கிடைக்கும். எனக்கு சாகித்ய அகாடமி விருது தாமதமாகத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது அதற்காக நான் குறைபட்டுக்கொள்ளவும் மாட்டேன். கிடைத்து விட்டது என்று கொண்டாடவும் மாட்டேன்.

ரசனை: உங்கள் கவிதை தொகுப்புகளில் சர்ப்ப யாகம் நல்ல கவிதைத் தொகுதியாக பேசப்பட்டது. அதற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

சிற்பி: நீலபத்மநாபனுக்கு தலைமுறைகள் நாவல் வந்திருந்த போதே கொடுத்திருக்க வேண்டும். அதே போல பள்ளி கொண்டபுரம் அவருடைய நல்ல நாவல் அதற்கெல்லாம் கிடைக்கும் என அவர் எதிர்பார்த்தார். அது பற்றி ஒரு குறைபாடு அவருக்கு இருந்தது. அவரே சாகித்ய அகாடமியின் கன்வீனராக இருந்தார். அதன் பிறகு இலையுதிர் காலம், தூண்டில், கூண்டினுள் பட்சிகள் போன்ற நாவல்களை எழுதினார். பிறகு நான் அகாடமி பொறுப்பேற்ற போது அவருக்கு விருது கிடைத்தது. அதாவது, அதற்கு முன் இருந்த கமிட்டி அவருக்கு விருது கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். பரிசு வழங்கும் போது நான் பொறுப்பில் இருந்தேன். நீலபத்மநாபனுக்கு விருது கொடுக்க வேண்டும் என நான் பொறுப்பில் இல்லாத போதே விரும்பியிருக்கிறேன். அதே மாதிரி சுந்தரராமசாமிக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காமல் போனதற்கு சாகித்ய அகாடமி அமைப்பை அவர் கடுமையாக விமர்சனம் செய்ததும் ஒரு காரணம். சரஸ்வதி சம்மான் என்ற பிர்லா அவார்டு கமிட்டியில் நான் மூன்றாண்டுகள் இருந்தேன். அதன் பரிசு தொகை அப்போதே 5 இலட்சம். சுந்தரராமசாமியின் நூலை தேர்வு செய்து அனுப்பவது என முடிவெடுத்துக் கண்ணனிடம் சொன்னேன். அவர் சு.ரா.வின் கவிதை நூல் ஒன்றை அனுப்பி இருந்தார். அதைப் பார்த்ததுமே பெரிய ஏமாற்றமாக போய்விட்டது. காரணம் அந்தத் தொகுப்பில் கவிதை எழுதிய மாதம் வருடம் ஒவ்வொரு கவிதைக்கு கீழும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட ஆண்டு வரையறை ஏற்புடையதாக இல்லை எனவே அதை விருதுக்கு தேர்வு செய்ய இயவில்லை. நீலபத்மநாபனின் பள்ளி கொண்டபுரம் நாவலை அனுப்பினோம் ஆனால் அதற்கு அந்த வருடம் பரிசு கிடைக்கவில்லை. அடுத்த வருடம் இந்திரா பார்த்தசாரதியின் இராமானுஜர் நாடகத்தை தேர்வு செய்து அனுப்பினோம். அதற்கு விருது கிடைத்தது. இறுதித் தேர்வுக்கு அனுப்ப என் முயற்சியும் இருந்தது. இந்திரா பார்த்தசாரதி டெல்லியில் பல காலம் இருந்ததால் அவரைப் பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த மாதிரியான பரிசுகளை பெறுவதற்கு பரிந்துரைகள் மட்டும் போதாது. அந்த படைப்பாளியின் படைப்பும் அவரைப்பற்றிய அறிமுகமும் சிறப்பாக இருக்க வேண்டும். ஞானபீடம் விருத்துக்கும் அப்படித்தான். நாம் ஞானபீட விருதுக்கு தமிழ்த் தேர்வுக் குழுவிலிருந்து தேர்வு செய்து அனுப்பும் நூல்களில் பன்முறை கலைஞருடைய புத்தகம் பரிந்துரை செய்து அனுப்பட்டது. அங்கிருப்பவர்கள் இதைப்பார்த்து என்னப்பா இது அரசியல் தலைவரின் புத்தகத்தையே அனுப்பி கொண்டு இருக்கிறாங்க எனச் சலித்து கொள்வார்களாம். இது எனக்கு அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னது. தமிழுக்கு அந்த வருடம் கொடுத்தாக வேண்டும் என முடிவு செய்திருக்கிற நிலையில் ஜெயகாந்தனுக்கு கொடுக்கப்பட்டது. உண்மையில் ஞானபீட விருது பெற்ற பிற மொழி எழுத்தாளர்களை விட தமிழ் எழுத்தாளர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதுதான் எனது கருத்து.


ரசனை: சாகித்ய அகாடமி விருது கமிட்டியில் முக்கியமான பொறுப்புகளில் இருந்திருக்கிறீர்கள். இப்போதும் இருந்து வருகிறீர்கள். ஒவ்வொரு முறையும் இந்த விருது அறிவிக்கப்படும் போது சர்ச்சைகள் எழுகிறது. தகுதியான படைப்பாளிக்கு இந்த விருது கொடுக்கப்படுவதில்லை அரசியல் நோக்கம் இருக்கிறது என்றெல்லாம் விமர்ச்சிக்கப்படுகிறது இந்த விமர்சங்கள் எந்த அளவிற்கு உண்மையானது?

சிற்பி: சாகித்ய அகாடமி விருதைப் பொறுத்தவரை அரசியல் ஏதும் இல்லை. அதில் இடம் பெற்றிருக்கிற ஜீரிகளைப் பொறுத்துதான் யாருக்கு விருது என முடிவாகிறது. விளக்கமாக சொல்லவதென்றால் பொதுவாக சாகித்ய அகாடமி அமைப்பு ஒரு பட்டியலை முடிவு செய்யும், எதன் அடிப்படையில் அந்த பட்டியல் தயாராகிறது என்பது யாருக்கும் தெரியது. சாகித்ய அகாடமியில் ஒவ்வொரு மொழியிலும் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பல்கலைக்கழகங்கள் மூலமும் ஒருவர் இலக்கிய அமைப்புகள் மூலமும் மற்றவர் அரசு சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழைப் பொறுத்தவரை பாண்டிச்சேரியில் இருந்தும் ஒருவர் வருவார். இப்போது நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம். நான், இ.ரா. மோகன், இராம.குருநாதன் பாண்டிச்சேரியிலிருந்து மகரந்தன் ஆகியோர் இருக்கிறோம். பிறகு ஆலோசனைக்குழு ஒன்று இருக்கிறது. இந்த நான்கு பேரும் பொதுக்குழு உறுப்பினர்கள். அதிலிருந்து நான் செயற்குழுவுக்குப் போனேன். 2008 முதல் 5 ஆண்டுகள் நான் செயற்குழுவில் இருப்பேன். செயற்குழுவில் இருப்பவர் தமிழ்ச் சாகித்யஅகாடமியின் ஒருங்கிணைபாளரும் கூட. தமிழ் ஆலோசனைக் குழுவில் ஆறு பேர் இருக்கிறார்கள் ஆக மொத்தம் பத்து பேர். இந்த பத்துப் பேரும் துவக்க நிலைப்பட்டியலாக ஆளுக்கு இருபது புத்தகங்களை தேர்வுக்காக பரிந்துரைப்பார்கள். இந்த ஒட்டுமொத்தப் பட்டியலும் தலைவரிடம் இருக்கும். இந்தப் பட்டியலில் மேலும் சுருக்கப்பட்டு 10 புத்தகங்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். இதில் பரிசுக்குறிய புத்தகங்களை தேர்வு செய்ய மூன்று நடுவர்களை தேர்வு செய்கிறார்கள். ஒருவர் இலக்கிய விமர்சகர், ஒருவர் படைப்பாளர், ஒருவர் கல்வியாளர், இவர்கள்தான் இந்த விருதை தேர்வு செய்கிற அமைப்பு. நடுவர்கள் யார் பரிசுக்கு யாரைத் தேர்வு செய்வார்கள் என்பதை எல்லாம் நாம் யூகிக்க முடியாது. அவர்கள் மூவரும் சேர்ந்து இறுதி முடிவை எடுப்பார்கள். அதனால் ஒரு புத்தகம் இறுதிப் பத்து புத்தகங்கள் பட்டியலுக்கு தேர்வாக வேண்டும் பிறகு மூன்று நடுவர்களில் மூவர் அல்லது ஏதேனும் இருவர் இந்த புத்தகத்திற்கு பரிசு கொடுக்கலாம் என பரிந்துரைக்க வேண்டும். அதன் பிறகே பரிசுக்குரியவர் யாரென முடிவாகிறது. இத்தனை விஷயங்கள் இருக்கிறது இதில். இதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல எழுத்தாளருக்கு விருது கிடைக்கவில்லை எனில் நாம் என்ன செய்யமுடியும். அது மூன்று நடுவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளருக்குக் கண்டிப்பாக இதில் கருத்துச் சொல்ல இடமில்லை.


ரசனை: வானம்பாடி படைப்பாளிகளில் முக்கியமான கவிஞர்கள் எல்லோரும் சாகித்ய அகாடமி விருது வாங்கி விட்டார்கள். கோவை.ஞானிக்கு ஏன் தரப்படவில்லை?

சிற்பி: ஞானிக்குக் கொடுக்கப்படவில்லை என்பதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவரது புத்தகம் இறுதிப்பட்டியலுக்கு வராமல் இருந்திருக்கலாம். நான் இருமுறை நடுவராக இருந்த போது அவருடைய நூல் வந்ததாக நினைவில்லை. ஆனால் ஒரு திறனாய்வாளர் என்ற முறையில் ஞானி விருது பெற முற்றிலும் தகுதி உடையவர்தான். பல சமயங்களில் நடுவர் குழுவில் இருக்கும் ஒருவர் விரும்பினால் கூட பரிசு தரமுடியாமல் போகலாம். ஞானியும் சண்பகம் ராமசாமியும் நடுவர்களாக இருந்த போது என் ‘சூர்ய நிழல்’ பரிசு பெற முடியவில்லை. புவியரசு நடுவராக இருந்த போதும் என் புத்தகம் இருந்தது. அவராலும் பெற்றுத் தர முடியவில்லை. அதனால் நண்பர்களே நடுவர்களாக இருந்தாலும் விருதைத் தூக்கித் தந்து விட முடியாது. நடுவர் குழுவில் ஏற்படும் சிக்கல்கள் அப்படிப்பட்டவை.
ரசனை: மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மொழி பெயர்ப்பு அனுபவங்களை சொல்லுங்கள்?

சிற்பி: நான் முதலில் ஆங்கிலத்திலிருந்துதான் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். காரணம் மலையாளம் எனது இரண்டாவது தாய்மொழி, மலையாளத்திலிருந்துதான் நான் அறிவையே பெற்றேன். அதனால் மலையாளத்திலிருந்து சில விஷயங்களை மொழி பெயர்க்க வேண்டும் என முடிவு செய்தேன். அப்படித்தான் சச்சிதானந்தன் கவிதைகளை மொழிபெயர்த்தேன். அதன் பிறகு சாகித்ய அகாடமியில் இருந்து லலிதாம்பிகா அந்தர்ஜனம் அவர்களின் அக்கினி சாட்சி நாவலை மொழி பெயர்க்க சொன்னார்கள். எனது மொழி பெயர்ப்பு அனுபவங்களிலேயே மிகக் கடுமையானது அது தான். அவர் கவிதைகள்தான் அதிகம் எழுதியிருக்கிறார். இது ஒன்றுதான் அவருடைய நாவல். நம்பூதிரி குடும்பத்தில் பெண்களுக்கு இருக்க கூடிய கட்டுப்பாடுகள், நெருக்கடிகளைப்பற்றியது இந்நாவல். இந்த நாவலில் பயன்படுத்த பட்டிருந்த மொழி கடுமையாக இருந்தது. நம்பூதிரி குடும்பத்தை பற்றிய நாவல் என்பதால் அந்த சமூகத்தில் வழக்காற்றில் பயன்படுத்த கூடிய சொற்கள் இதில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருந்தது. அதனால் அதை மொழி பெயர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். எர்ணாகுளத்தில் வாழும் டாக்டர்.லீலாவதி எனக்கு பழக்கம். அவங்க மலையாளக் கவிதை வரலாற்றைப் பற்றி ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்காங்க. அவர்களிடம் இதைப் பற்றி சொன்ன போது நம்பூதிரி வழக்காற்று சொற்கள் பற்றி ஒரு அகராதியிருக்கிறது அது இப்போது கிடைப்பதில்லை. நான் எப்படியாவது ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த அகராதியை பார்த்த பிறகுதான் அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்கு அர்த்தம் தெரிந்தது. அதை வைத்துதான் அந்த நூலை மொழிபெயர்த்தேன். ஓ.என்.வி.குரூப் அவர்களின் உஜ்ஜையினி நூலை மொழிபெயர்த்தேன். எம்.டி.வாசுதேவநாயருடைய இரண்டாம் ஊழம் என்ற நாவலை அவர் கேட்டுக் கொண்டதால் நான் மொழிபெயர்க்கத் தொடங்கிய நிலையில் சாகித்ய அகாடமியில் வேறொருவரை வைத்து அதை முடிச்சிட்டாங்க அதனால் அது பாதியிலேயே நின்னு போச்சு அதற்கு வாசுதேவநாயர் வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதன் பிறகு அவரது வாராணசி என்ற நாவலை மொழிபெயர்ப்பு செய்தேன். எனக்கு பிடித்த மொழி பெயர்ப்பென்றால் தாஸ்தாயெவ்ஸ்கியின் வரலாற்றின் ஒரு பகுதியை பாப்புலர் நாவலிஸ்ட் ஒருவர் நாவலாக எழுதியிருக்கிறார். அவர் பெயர் பெரும்படவம். ஸ்ரீதரன் அந்த நாவல் மலையாளத்தில் பல பதிப்புகள் கண்டது. அதைத் தமிழில் நான் மொழி பெயர்த்தேன். அதன் வெளியீட்டு விழாவில் சுந்தரராமசாமி கலந்து கொண்டார். எனது மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது என பாராட்டினார். அது எனக்கு பெருமையாக இருந்தது. இப்படி என்னையறியாமல் மொழி பெயர்ப்புக்குள் இறங்கியிருக்கிறேன். இப்போது மாத்ருபூமியின் மேனேஜிங் டைரக்டர்.வீரேந்திரக்குமார் எழுதிய ‘ஹைமவதபூவில்’ இதை நான் வெள்ளிப்பனிமலையின் மீது என மொழி பெயர்த்திருக்கிறேன். மலையாள தலைப்பு குமாரன் ஆசானுடையது அதனால் பாரதி வரியைப் பயன்படுத்தலாமே என விஜயகுமார் குனிசேரி சொல்ல இத்தலைப்பு அமைந்தது.

ரசனை: தமிழ் எழுத்தாளர்களில் சாரு நிவேதிதாவின் மலையாள மொழி பெயர்ப்பு நாவல்கள் கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக சொல்ல படுகிறதே?

சிற்பி: சாருவின் ஜீரோ டிகிர் நாவல் அங்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதா என்ற பெயர் அங்கு அறியப்பட்டிருக்கிறது. மற்றபடி அவுட் ஸ்டேண்டிங்காக இருக்கு என்று அங்கு பேசப்பட்டதாக சொல்ல முடியாது. பாமாவின் சங்கதி நாவலை விஜயக்குமார் குனிசேரி மொழி பெயர்த்திருக்கிறார். இங்கிருந்து போன நாவல்களில் அது அங்கு மிக நன்றாகப் பேசப்படுகிறது.

ரசனை: தமிழில் உள்ள நல்ல படைப்புகளை மலையாளத்தில் நீங்களே மொழி பெயர்ப்பு செய்யலாமே?

சிற்பி: என்னால் தமிழில்தான் சிறப்பாகச் செய்யமுடியும். மலையாளத்தில் அவ்வளவு நன்றாகச் செய்ய இயலாது. நீல.பத்மநாபன் போல் இரு மொழிகளிலும் நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் செய்தால்தான் சிறப்பாக இருக்கும்.

ரசனை: இதுவரை நடந்து முடிந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடுகளுக்கும் கோவையில் வரும் ஜீன் 2010 ல் நடக்க உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன? இதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள் எழுந்து வருகிறது?

சிற்பி: இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் அனுமதியோடு நடத்தப்பட்டவை. ஓராண்டு கூட அவகாசம் இல்லாமல் இம்மாநாட்டை நடத்த இயலாதென உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் சொல்லியிருக்கிறார் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பத்து பேர். அதில் ஆறு பேர் நடத்தலாம் என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதில் கா.சிவத்தம்பியும் ஒருவர். ஆனால் அந்த அமைப்பின் தலைவரும், துணைத்தலைவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை அப்படியெனில் இந்த மாநாட்டை நடத்த இயலாது. ஆனால் சட்டப்படி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடாக இதை நடத்த முடியாது. என்னதான் அந்த அமைப்புக்குள் இருப்பவர்கள் ஒப்புதல் தெரிவித்தாலும் தலைவரின் ஒப்புதல் இன்றி இதை நடத்த முடியாது. அதனால்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என பெயர் வைத்திருக்கிறார்கள். உலகத் தமிழ் மாநாடு என்ற தோற்றத்தில் இதை நடத்த விரும்புகிறார்கள்.

ரசனை: க.சிவத்தம்பி போன்ற அறிஞர்கள் இதற்கு வருவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்களே?

சிற்பி: பெரியவர்.கா.சிவத்தம்பி மாநாட்டில் கலந்து கொள்ள வருவதாக சொல்லியிருப்பது வியப்பும் மகிழ்ச்சியும் தருகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் அந்தரங்கத்தில் அரசியல் இருக்கக்கூடும் அது குறித்து நான் எதுவும் கூறுவதற்கில்லை. ஆனால் இது மொழி ஆய்வு தொடர்பான மாநாடு நம் காலத்தில் மொழிக்கு நன்மைகள் விளைய வாய்ப்பு எப்படி எவ்வகையில் நேர்ந்தாலும் அது வரவேற்புக்குரியது. அந்த வகையில் பெரியவர். கா.சிவத்தம்பி நினைப்பது போலவே நானும் நினைக்கிறேன்.