Monday, February 17, 2020

Tuesday, February 26, 2019


இருள்
-____
இருள் ஒருபோதும் விளக்குகளை
அணைப்பதில்லை
மாறாக விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது
அல்லது ரசிக்கிறது
அல்லது காதலிக்கிறது
அல்லது வணங்குகிறது
இருள் ஒளியை தின்று உயிர்த்திருக்கும்
ஓர் உயிரியாய் எங்கும் வசிக்கிறது.
....
தென்பாண்டியன்




மியா என்றொரு சொல்....

....
யுவதியின் மடியில் படுத்திருக்கும் பூனை
அவள் மடிச்சூட்டை உள்வாங்கி
பாசாங்காய் உறங்குகிறது
நாப்கின் தாள் போன்ற அதன் மெல்லிய காதுகளை
யுவதி நடுவிரல் நகங்கொண்டு வருடுகிறாள்
பூனை கண்விழிக்காமல் நெற்றியை சுருக்கி நெளிகிறது
இப்போது அவள் பூனையை
தோளுக்கும் மார்புக்கும் இடையில்
ஒரு துண்டைப்போல் அணிந்து கொள்கிறாள்
பூனையின் மிருதுவான சாம்பல் நிற ரோமங்கள்
கசங்கி கருமையடைகிறது
அவள் கழுத்தோரத்தில் தடித்த நீர்க்கோடாய்
கிழிறங்கும் வியர்வையை பூனை நாவல் தீண்டுகிறது
வியர்வையின் உப்புச்சுவை அதன் தொண்டையில்
கரைகையில் அது பித்தம் கொள்கிறது
பூனையின் காதில் ஏதோ கிசுகிசுக்கிறாள் யுவதி
அதற்கு பூனை மியா என்றது
மீண்டும் அவள் ஏதோ கதைக்கிறாள்
அதற்கும் பூனை மியா என்றது
மீண்டும் ஏதோ சொல்லி நகைக்கிறாள்
சற்று இடை விட்டு மிக சன்னமான குரலில்
பூனை மியா என்றது.
இப்போது மியா என்றொரு சொல்
ரகசிய சிநேகத்தன் கடவுச்சொல்லாகிறது
யுவதியின் மனவெளியில் அரூபமாய் உலவுகிறான்
ஒரு பூனையன். 

...

 – தென்பாண்டியன்.


 ....

Tuesday, March 14, 2017









ஓர் இறகின் உள் உலகம்


பறவையின் உதிர்ந்த இறகொன்றை எடுத்து
காது குடைந்த போது
சிறகுள்ள தேவதை ஒருத்தி
என்னை தழுவிக்கொண்டு பறந்தாள்
பீதியூட்டும் அந்தரவெளியில்
வான் நீலம் கரைய பெரும் மழை பெய்தது
விரையும் சிறகசைவில் பட்டுத்தெறிக்கும்
நீர் துளிகள் என்னை குளிரூட்ட 
அவள் தன் மார்புச்சூட்டை பெருக்கி
வெப்பமூட்டினாள்
விரிந்த பேராகாயத்தில்
முடிவற்று நிகழும் பயணத்தின்ணுாடே
இயலாமையில் சினங்கொண்ட
குறி சிறுத்த தேவகுமாரர்களால்
சபிக்கப்பட்ட தேவதைகளின்
கதையொன்றை சொன்னாள்.

– தென்பாண்டியன்

Thursday, August 25, 2016


இரவு

--------


இருளில் மறைந்திருந்த திருடர்கள்
ஓசையின்றி
கரும்புகை  என  மெல்ல நகர்ந்து
வாசலில் படுத்துறங்கும்
கறுப்பு நாயின் வாலை மிதித்து விடாமல்
வீட்டுக்குள் நுழைவதை
கண்கள் ஒளிர 
பார்த்துக் கொண்டிருந்தது
மதில் மேல் அமர்ந்திருந்த 
கருப்புப் பூனை.
----


- தென்பாண்டியன்


ஆனந்த விகடன் 25.08.2013 ல்
வெளியானது

Wednesday, August 10, 2016


பூனை வீடு


இசையால் நிரம்பியதிரும்
அந்த வீடு பூட்டியிருக்கிறது

எதேச்சையாக பியானோ மீது
தாவி  நடக்கத்துவங்கிய
பூனையின் கால்கள்
இசை வயப்பட்டு மீண்டும் மீண்டும்
நடக்கிறது





மின்சாரம் துண்டிக்கப்பட்ட மழையிரவில்
அசைவற்று கண்கள் ஒளிர
பூனை அமைதி கொள்கிறது

மழை நின்று
குளிர்ந்து புலரும் ஈரவிடியலில்
கண்களயர்ந்து பூனை 
உறங்குகிறது

சன்னலிடையே உள்நுழையும்
வெயிலில்
தூசியகன்ற பியானோக் கட்டைகள் 
பளிச்சிடுகின்றன.



-  தென்பாண்டியன்.

( உயிர் எழுத்து இதழில் பிரசுரமான கவிதை) 

வனம் பெருகுதல்

....
முன்பொரு காலத்தில்
இப்பெரும் தேசத்தின் 
இளவரசானாய்  இருந்தேன்

தரையிறங்கிய துஷ்ட தேவதைகள்
என் தேசத்தை வென்றெடுத்த போது
என் நாட்டின் பிரஜைகள்
பறவைகளாகவும்
தோல்வியுற்ற எனது சேனைகள்
மரங்களாகவும் சபிக்கப்பட்டனர்

தேசமிழந்து வனமெங்கும்
தனிமை கொண்டலையும்  நான்
வெட்டப்படாத மரங்களால்
வனங்கள் பெருகவும்
வேட்டையாடப்படாத பறவைகளால்
வானம் நிறையவும்
என் பழங்கடவுளை வேண்டி நிற்கிறேன்.

- தென்பாண்டியன்