மியா என்றொரு சொல்....
....
யுவதியின் மடியில் படுத்திருக்கும் பூனை
அவள் மடிச்சூட்டை உள்வாங்கி
பாசாங்காய் உறங்குகிறது
நாப்கின் தாள் போன்ற அதன் மெல்லிய காதுகளை
யுவதி நடுவிரல் நகங்கொண்டு வருடுகிறாள்
பூனை கண்விழிக்காமல் நெற்றியை சுருக்கி நெளிகிறது
இப்போது அவள் பூனையை
தோளுக்கும் மார்புக்கும் இடையில்
ஒரு துண்டைப்போல் அணிந்து கொள்கிறாள்
பூனையின் மிருதுவான சாம்பல் நிற ரோமங்கள்
கசங்கி கருமையடைகிறது
அவள் கழுத்தோரத்தில் தடித்த நீர்க்கோடாய்
கிழிறங்கும் வியர்வையை பூனை நாவல் தீண்டுகிறது
வியர்வையின் உப்புச்சுவை அதன் தொண்டையில்
கரைகையில் அது பித்தம் கொள்கிறது
பூனையின் காதில் ஏதோ கிசுகிசுக்கிறாள் யுவதி
அதற்கு பூனை மியா என்றது
மீண்டும் அவள் ஏதோ கதைக்கிறாள்
அதற்கும் பூனை மியா என்றது
மீண்டும் ஏதோ சொல்லி நகைக்கிறாள்
சற்று இடை விட்டு மிக சன்னமான குரலில்
பூனை மியா என்றது.
இப்போது மியா என்றொரு சொல்
ரகசிய சிநேகத்தன் கடவுச்சொல்லாகிறது
யுவதியின் மனவெளியில் அரூபமாய் உலவுகிறான்
ஒரு பூனையன்.
...
– தென்பாண்டியன்.
....